இந்தியா

கழற்றிவிடப்படுகிறாரா சுஷில் மோடி? - உற்ற நண்பரை 'மிஸ்' செய்யும் நிதிஷ் குமார்!

கழற்றிவிடப்படுகிறாரா சுஷில் மோடி? - உற்ற நண்பரை 'மிஸ்' செய்யும் நிதிஷ் குமார்!

webteam

பீகார் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சுஷில் மோடி, பாஜக-வில் இருந்தும் கழற்றப்படுகிறார் என்று அம்மாநில ஊடகங்கள் கூறத் தொடங்கியுள்ளன.

பீகார் முதல்வராக மீண்டும் அரியணை ஏறியிருக்கிறார் நிதிஷ் குமார். கடந்த சில வருடங்களாக நிதிஷ் அமைச்சரவையில் துணை முதல்வராகவும், நிதி அமைச்சராகவும் பதவி வகித்த சுஷில் மோடிக்கு இந்த முறையும் அதே பதவி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதில் திருப்பமாக ரேணு தேவி, தர்க்கிஷோர் பிரசாத் என்ற இருவர் துணை முதல்வர்களாக பதவியேற்றுள்ளனர். இது பீகார் மக்களுக்கும், குறிப்பாக பாஜக தொண்டர்களுக்குமே மிகப்பெரிய ட்விஸ்ட்டாக அமைந்தது.

சுஷில் மோடிக்கு இந்த முறை ஏன் பதவி கொடுக்கப்படவில்லை என்று பதவிப் பிரமாணம் எடுத்த பிறகு செய்தியாளர்கள், நிதிஷ் குமாரை நோக்கி கேள்வி எழுப்ப, "அது பாஜகவின் முடிவு. நீங்கள் பாஜகவிடம்தான் கேட்க வேண்டும். ஆனால், சுஷில் இல்லாததை நான் மிஸ் செய்வேன்" என்று கூறினார்.

நிதிஷ் கூறியது போலவே இது பாஜக-வின் முடிவுதான். பதவியேற்பு விழாவுக்கு ஒருநாள் முன்னதாகவே, பாஜக மத்திய தலைமை இந்த முடிவை எடுத்துவிட்டது. முன்தினம் நடந்த கட்சிக் கூட்டத்தில் அவர் ஒதுக்கப்படுவதை சொல்லி, அவர் மூலமாகவே, பாஜக சட்டமன்ற தலைவராக ரேணு தேவியை அறிவிக்க வைத்தது மத்திய தலைமை.

சுஷில் மோடியை இப்படி மத்திய தலைமை புறக்கணிக்க என்ன காரணம் என்பது தெரியாமல் குழம்பி நிற்கின்றனர் அவரின் ஆதரவாளர்கள். இது தொடர்பாக பீகார் மாநில ஊடகங்கள் சில தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். இதை தெரிந்துகொள்வதற்கு முன்னர் சுஷில் மோடி - நிதிஷ் இடையேயான நட்பை புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

70-ல் தொடங்கிய நட்பு!

2010 சட்டமன்றத் தேர்தலின்போது ஒரு செய்தியாளர் சந்திப்பில் நிதிஷிடம், நரேந்திர மோடி குறித்தும், பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்டிஏ) பிரச்சாரம் செய்ய அவரை அனுமதிக்கலாமா என்று கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, "சுஷில் மோடி எனக்கு போதும்'' என்று கூறினார் நிதிஷ். இந்த ஒரு சொல்லே இருவருக்கும் இடையேயான நட்புக்கான எடுத்துக்காட்டு. இருவருக்கும் இடையிலான உறவு 1970-களில் இருவரும் மாணவர் தலைவர்களாக இருந்தபோது தொடங்கியது. இருவரும் ஒன்றாக எமெர்ஜென்சிக்கு எதிராக போராடியுள்ளனர். 2005-ல் நிதிஷ் முதல்வராக பதவியேற்றபோது, துணை முதல்வராக சுஷில் மோடி பதவியேற்றுக்கொண்டார்.

சுஷிலுக்கு பீகாரின் பெரிய செல்வாக்கு கொண்ட சமூகப் பின்னணி இல்லை. ஆனால், நிதிஷின் மன ஓட்டங்களை அறிந்தவர். சுஷில் மோடி, நிதிஷுக்கு அரசியல் அச்சுறுத்தலாக இருக்கவில்லை. பாஜகவைச் சேர்ந்தவர் என்றாலும், சுஷில் மதசார்பற்ற கொள்கைகளை ஏற்றுக்கொள்ளக் கூடிய நபராக இருந்தார். இதனால், இவர்களின் நட்பு நாளுக்கு நாள் இன்னும் நெருக்கமாகிக் கொண்டே போனது. நிதிஷும், பாஜகவும் கருத்தியல் ரீதியாக முரண்பட்ட போதும், நிதிஷ் குமாருக்கும் பாஜகவுக்கும் இடையில் ஒரு பாலமாக செயல்பட்டார் சுஷில்.

நிதிஷ் குமாருக்கு மட்டுமல்ல, கூட்டணிக்கு வெளியே கூட சுஷில் மோடி ஒரு பரந்த ஏற்றுக்கொள்ளலைக் கொண்டிருந்தார். உதாரணமாக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது பதவிக்காலத்தில், சுஷில் மோடி சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான மாநில நிதியமைச்சர்களின் அதிகாரம் பெற்ற குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார் என்றால், அதிலிருந்தே அவரைப்பற்றி தெரிந்துகொள்ளலாம். 

சுஷில் மோடிக்கு பதவி கொடுக்கப்படாதது ஏன்?!

நிதிஷ் உடன் காட்டிய நெருக்கமே சுஷிலின் பதவிக்கு வினையாக வந்து அமைந்தது என்கின்றன பீகார் ஊடகங்கள். நிதிஷ் குமாரிடம் அனுதாபம் கொண்ட ஒரு தலைவர் பாஜகவுக்கு இனி தேவையில்லை என்று அக்கட்சியின் மத்திய தலைமை விரும்புகிறது. காரணம் ஜே.டி.யுவை விட பாஜக 30 இடங்கள் அதிகம் வென்று பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதனால், இனி நிதிஷிடம் சுமுகமான அணுகுமுறை கூடாது, ஆக்ரோஷமான அணுகுமுறை வேண்டும். அப்போதுதான் நிதிஷை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்று எண்ணியே சுஷிலுக்கு பதவி கொடுக்கப்படவில்லை என்றும் ஊடகங்கள் கூறியுள்ளன. அப்படியென்றால் சுஷிலின் எதிர்காலம் அவ்வளவுதானா என்றால், இல்லையென்கிறது பாஜக தரப்பு.

சுஷிலின் எதிர்காலம் என்ன?!

லாலு -ரப்ரி ராஜ் அல்லது கிராண்ட் அலையன்ஸ் அரசாங்கமாக இருந்தாலும், தொடர்ச்சியான ஊழல் பிரச்னையில் அப்போதைய அரசுகளை துளைத்தெடுத்தவர் சுஷில். அவரின் அப்போதைய செயல்பாடுகளே பாஜகவை பீகாரில் இப்போது துடிப்புடன் இருக்க வைத்துள்ளது. நிதிஷ் குமாருடன் இவ்வளவு முரண்பாடுகள் இருந்தபோதிலும், சுஷில் மோடி ஒரு வலுவான கூட்டணியைப் பேணுவதற்கு காரணமும் சுஷில்தான். அதனால், அவரை ஓரங்கட்டினால் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அது கடும் விளைவை ஏற்படுத்தும் என்பது பாஜக மத்திய தலைமை நன்றாக புரிந்து வைத்துள்ளது. அதனால், அவருக்கு மத்தியில் பதவி கொடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது என பீகார் ஊடகங்கள் கூறியுள்ளன.

அதற்கேற்பவே, "சுஷில் மோடி ஜி சிறிதும் வருத்தப்படவில்லை. அவர் எங்களுக்கு ஒரு சொத்து. கட்சி அவரைப் பற்றி சிந்திக்கும், அவருக்கு ஒரு புதிய பொறுப்பு வழங்கப்படும்" என்று மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார். மேலும், நேற்று பதவியேற்பு விழாவுக்கு வந்திருந்த அமித் ஷா, ஜேபி நட்டா இருவரும் பதவியேற்பு விழா முடிந்தபின்பு தனியார் ஹோட்டலில் சுமார் நான்கு மணிநேரம் சுஷில் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.