இந்தியா

நிதிஷ் ராஜினாமா: 20 மாதங்களாக நீடித்த மெகா கூட்டணி உடைந்தது

நிதிஷ் ராஜினாமா: 20 மாதங்களாக நீடித்த மெகா கூட்டணி உடைந்தது

webteam

பீகார் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியிருக்கிறார் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ் குமார். இத்துடன் பீகாரில் அமைந்த மெகா கூட்டணி உடைந்துள்ளது.

கடந்த 2015ல் நடந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மெகா கூட்டணியை அமைத்தன. பீகாரின் இருபெரும் துருவங்களாக இருந்த நிதிஷும், லாலுவும் முதல்முறையாகக் கைகோர்த்த இந்த கூட்டணி பாஜகவை வீழ்த்தி ஆட்சியமைத்தது. முதலமைச்சராக நிதிஷ்குமாரும், துணைமுதலமைச்சராக லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவும் பதவியேற்றுக்கொண்டனர். 

கடந்த 20 மாதங்களாக நீடித்த இந்த கூட்டணியில் முதல் பிளவு, தேஜஸ்வி மீது சிபிஐ ஊழல் புகார் பதிவு செய்ததில் தொடங்கியது. ஹோட்டல்களுக்கு நிலங்களை ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலுபிரசாத், அவரது மனைவு ராப்ரி தேவி மற்றும் மகனும், துணைமுதலமைச்சருமான தேஜஸ்வி ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. 

இந்த விவகாரம் பீகார் மட்டுமல்லாது தேசிய அரசியலிலும் புயலைக் கிளப்பியது. ஊழல் புகாரில் சிக்கிய தேஜஸ்வி பதவி விலக வேண்டும் என்ற குரல் பீகார் அரசியலில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. இதுதொடர்பாக தேஜஸ்வி தரப்பிடம் நிதிஷ் விளக்கம் கேட்டதாகவும், ஆனால் உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக லாலுபிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி பல்வேறு ஆலோசனைகளை நடத்தியது. தேஜஸ்வி பதவி விலகத் தேவையில்லை என்றும், அவரைப் பதவி விலகுமாறு நிதிஷ் கேட்கவில்லை என்றும் லாலு பிரசாத் யாதவ் கூறினார். இந்தசூழலைப் பயன்படுத்திக் கொண்ட பீகார் மாநில பாஜக, தேஜஸ்வியை பதவி நீக்கம் செய்தால் நிதிஷ் அரசுக்கு ஆதரவளிக்கத் தயார் என்றும் அறிவித்தது. 

மகாபந்தன் எனப்படும் மெகாகூட்டணியில் லாலுவின் இன்றைய பேச்சு பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. தேஜஸ்வி பதவி விலகல் தொடர்பாக பேசிய அவர், நிதிஷ்குமாரை முதல்வராக்கியதே நான்தான் என்று எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசியிருந்தார். இந்த நிலையில் நிதிஷ் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். 
மாலையில் ஆளுநர் மாளிகையைத் தொடர்புகொண்ட நிதிஷ், அவசரமாக சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நிதிஷின் அவசர அழைப்பை அடுத்து மேற்குவங்க பயணத்தை ஆளுநர் கேசரிநாத் திரிபாதி ரத்து செய்தார். ஆளுநரை நேரில் சந்தித்த நிதிஷ்குமார், தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கடிதம் அளித்தார். ஆளுநர் மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த நிதிஷ்குமார், ஊழல் புகாரில் யாரையும் பதவிவிலகச் சொல்லவில்லை என்றும், ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக குறைந்தபட்சம் உரிய விளக்கம் கூட கொடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். தேஜஸ்வி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் கூறியதாகத் தெரிவித்த அவர், இந்த விவகாரம் தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே பதவி விலகும் முடிவுக்கு தாம் வந்ததாகவும் கூறினார். நிதிஷ் பதவி விலகலைத் தொடர்ந்து மெகா கூட்டணி உடைந்துள்ளது.