பாட்னாவில் உள்ள எல்.என்.மிஸ்ரா நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார். சுமார் ரூ. 10 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியநிலையில், புதிதாக சேர்க்கப்பட்ட 20 ஆசிரியர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்குத்தான் ஏசிஎஸ் கல்வி நிறுவனத்தின் தலைவர் சித்தார்த், பூந்தொட்டி கொடுத்து வரவேற்றார். உடனே அதை வாங்கிய நிதிஷ்குமார், விளையாட்டுத்தனமாக அதை சித்தார்த்தின் தலையில் வைத்துள்ளார். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும் வெட்கக்கேடானது என்றும் தெரிவித்து வருகின்றனர். முதல்வரின் அசாதாரண செயல்களின் பட்டியலில் தற்போது இதுவும் இணைந்து விட்டதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், ஆர்ஜேடி செய்தி தொடர்பாளர் மிருத்யுஞ்சய் திவார், ”அவரது செயல்பாடுகள் மாநிலத்திற்கு அவமானத்தை ஏற்படுத்துகின்றன. அவரது மனம் அவரது கட்டுப்பாட்டில் இல்லை என்பதைதான் இந்த நிகழ்வு காட்டுகிறது. “ என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மார்ச் மாதம், பாட்னாவில் நடந்த செபக் தக்ரா உலகக் கோப்பை தொடக்க விழாவின் போது, தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பு நிதீஷ்குமார் திடீரென மேடையை விட்டு வெளியேறினார்.கடந்த ஆண்டு நவம்பரில், தர்பங்காவில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியின் கால்களைத் தொட அவர் முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.