இந்தியா

அருணாச்சலப் பிரதேசம்: நிதிஷ்குமார் கட்சியிலிருந்து பாஜகவுக்கு தாவிய 6 எம்.எல்.ஏக்கள்

Veeramani

அருணாச்சலப் பிரதேசத்தில் நிதிஷ்குமாரின் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த மொத்தமுள்ள 7 எம்.எல்.ஏக்களில் 6 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர்.

அருணாச்சலப் பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளம்  கட்சியை சேர்ந்த ஏழு எம்.எல்.ஏக்களில் 6 பேர் ஆளும் பாஜகவுக்கு தாவியுள்ளனர்  என்று  மாநில சட்டமன்றம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அருணாச்சல் மக்கள் கட்சியின் (பிபிஏ) ஒரே ஒரு எம்.எல்.ஏவான லிகாபாலி தொகுதியைச் சேர்ந்த கர்டோ நைகியோரும் பாஜகவில் சேர்ந்துள்ளார்.

அருணாச்சலில் பஞ்சாயத்து மற்றும் நகராட்சி வாக்கெடுப்பு முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த மாற்றங்கள் நடந்துள்ளன.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள கட்சி அருணாச்சலில் 2019 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 15 இடங்களில் ஏழு இடங்களில் வென்றது. 41 இடங்களைப் பெற்ற பாஜகவுக்குப் பிறகு இரண்டாவது பெரிய கட்சியாகவும் ஜேடியூ உருவெடுத்தது. இந்த அதிரடி மாற்றங்களுக்கு பிறகு தற்போது 60 உறுப்பினர்களைக் கொண்ட  மாநில சட்டசபையில் 48 எம்.எல்.ஏ.க்களை பாஜக கொண்டுள்ளது. அதே நேரத்தில் 7 எம்.எல்.ஏக்களை வைத்திருந்த ஜே.டி.யுவிற்கு  தற்போது ஒரு எம்.எல்.ஏ மட்டுமே உள்ளார். காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் கட்சி (NPP) தலா நான்கு உறுப்பினர்களைக் கொண்டுள்ளன.