இந்தியா

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாஜகவுடன் தொடர்பில் உள்ளார் - பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு

ச. முத்துகிருஷ்ணன்

பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் பாரதிய ஜனதா கட்சியுடன் தொடர்பில் இருப்பதாக தேர்தல் வியூக அமைப்பாளரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

முழு நேர அரசியலில் ஈடுபடும் நோக்கில் பீகாரில் பாதயாத்திரை நடத்தி வரும் பிரசாந்த் கிஷோர், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “பாஜகவுக்கு எதிராக நிதிஷ் குமார் தேசிய அளவில் கூட்டணி உருவாக்கி வருவதாக மக்கள் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர் பாஜகவுடன் தொடர்பு வைத்திருப்பதை அறியும்போது அவர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைவார்கள். தனது கட்சி எம்.பி.யும், மாநிலங்களவை துணைத்தலைவருமான ஹரிவன்ஷ் மூலம் நிதிஷ் குமார் பாஜகவுடன் தொடர்பில் இருக்கிறார். சூழ்நிலை ஏற்பட்டால் அவர் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைக்க தயங்கமாட்டார்.” என்று தெரிவித்தார்.

பாஜகவுடனான உறவை ஐக்கிய ஜனதா தளம் துண்டித்துள்ள நிலையில், ஹரிவன்ஷை தனது ராஜ்யசபா துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்யும்படி கேட்காததற்கு இதுவே காரணம் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிரஷாந்த் கிஷோர் முன் வைத்துள்ள இந்த குற்றச்சாட்டிற்கு ஐக்கிய ஜனதா தளம் மறுப்பு தெரிவித்துள்ளது.

“பிரசாந்த் கிஷோர் கூற்றுக்களை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம். நிதிஷ் குமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாகவும், கிஷோர் ஆறு மாதங்களாகவும் தீவிர அரசியலில் உள்ளனர். குழப்பத்தை ஏற்படுத்தவே இதுபோன்ற கருத்துகளை பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். நிதிஷ் குமார் மீண்டும் ஒருபோதும் பாஜகவுடன் கைகோர்க்க மாட்டார்” என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செய்தி தொடர்பாளர் கே.சி. தியாகி தெரிவித்துள்ளார்.

இருப்பினும் பிரஷாந்த் கிஷோர் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்பட்ட ராஜ்யசபா துணை தலைவர் ஹரிவன்ஷ் இந்த குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.