பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பேராசைக்காரர் என்றும் இறுதி மூச்சு வரை தானே முதல்வராக இருக்க வேண்டும் என அவர் ஆசைப்படுவதாகவும் ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும் பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் கடுமையாகச் சாடியுள்ளார்.
பீகாரில், நிதிஷ் குமார் அரசு ரூ.1200 கோடி அளவுக்கு ஸ்ரீஜன் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி வரும் லாலு, இதற்கு எதிராக பகல்பூரில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் பேசிய அவர், ‘ என் மீதும், குடும்பத்தினர் மீதும் வழக்குகள் பதிவு செய்வதன் வழியாகவும், சி.பி.ஐ. மூலமும் என்னை அச்சுறுத்த முடியாது. பிரதமர் மோடியின் இது போன்ற மிரட்டல்களுக்கு நான் அஞ்சப்போவதில்லை. இது என்னிடம் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்தாது. நிதிஷ் குமாரும் துணை முதல்வர் சுஷில் மோடியும் பல்வேறு மோசடிகள் செய்த போதும் அவர்கள் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யப்படாதது ஏன்? அரசியல் ரீதியாக என்னை வீழ்த்த முடியாத நிதிஷ் குமாரும் பாரதிய ஜனதா கட்சியும் தனது மகனை குறி வைத்துள்ளது’ என்று கூறினார்.