யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் கட்டணம் மீண்டும் விதிக்க மத்திய அரசு முடிவு செய்த நிலையில், 100 ரூபாய் பரிவர்த்தனைக்கு 40 பைசா கட்டணம் செலுத்துவதால் யாரும் செத்துவிடமாட்டார்கள் என நிதி ஆயோக் துணைத் தலைவர் கூறியிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள், சாதாரண மக்கள்மீது கூடுதல் சுமை ஏறுமென குற்றம் சாட்டி இந்த முடிவை எதிர்த்து வருகின்றன.
நொடிப்பொழுதில் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை நடப்பதால் சாமானியார்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினர் இடையே யுபிஐ பரிவர்த்தனை முக்கியப் பங்காற்றுகிறது. யுபிஐ பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான சர்வர் பராமரிப்பு செலவுகள், அதிகரித்து வரும் பரிவர்த்தனை அளவுகள் ஆகியவற்றை கையாள வங்கிகளுக்கும், கட்டண சேவை நிறுவனங்களுக்கும் பெரும் செலவாகிறது. இதனால், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் கட்டணத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என இத்துறையை சேர்ந்த நிறுவனங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.
ஆனால் அப்படி யுபிஐ பரிவர்த்தனைக்கும் கட்டணம் கொண்டுவந்தால், அது படிப்படியாக எதிர்காலத்தில் அனைத்து பேமெண்ட்-களுக்கும் எளிதாக விரிவுபடுத்தப்படலாம். இந்தச் செலவை தவிர்க்க முடியாமல் இறுதியில் சாதாரண மக்கள்தான் அதை ஏற்க வேண்டியிருக்கும், அவர்கள் இனி UPI பரிவர்த்தனைகளைப் பயன்படுத்த பணம் செலுத்த வேண்டியிருக்கும் என எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இந்நிலையில் தான் யுபிஐ பரிவர்த்தனைக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்படுவதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. அதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், 100 ரூபாய் யுபிஐ பரிவர்த்தனைக்கு 40 பைசா கட்டணம் செலுத்துவதால் யாரும் செத்துவிடமாட்டார்கள் என நிதி ஆயோக் துணைத் தலைவர்ணைத் தலைவர் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “யுபிஐ மூலம் ஒரு 100 ரூபாயை பரிவர்த்தனை செய்யும்போது 40 பைசா கட்டணம் செலுத்துவது என்பது மிகக் குறைந்த அளவுதான். டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மத்திய அரசு நெடுங்காலம் இலவசமாகவே வழங்கிக் கொண்டிருக்க முடியாது. ஒரு 40 பைசா செலுத்துவதால் ஒன்றும் செத்துவிட மாட்டார்கள்” என யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் பிடிப்பதை சரிதான் என்று பேசியுள்ளார். இவருடைய கருத்து சர்ச்சையை கிளப்பிய நிலையில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
எம்டிஆர் கட்டணம் குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின் படி, “தனிநபர்களுக்கு இடையேயான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது. அதேவேளையில் ரயில்வே, தொலைத்தொடர்பு சேவைகள், காப்பீடு, எரிபொருள் போன்ற குறிப்பிட்ட வணிக பிரிவுகளில் ரூ.2,000-க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைக்கு ரூ.5 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக ரூ.2,000-க்கு மேற்பட்ட வர்த்தக UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் விதிக்கப்படும் என்றும், ஒரு பரிவர்த்தனைக்கான அதிகபட்ச வர்த்தக கட்டணமாக ரூ.300-ஆக நிர்ணயம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.