இந்தியா

உடல் பருமன் பாதிப்புகள் எதிரொலி: சில உணவுப் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்பா?

கலிலுல்லா

இந்தியாவில் உள்ள மக்களிடம் அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்னையை தீர்க்க அதிக உப்பு மற்றும் சர்க்கரை கொண்ட உணவுப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க மத்திய அரசின் நிதி ஆயோக் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் பெண்களிடையே அதிக எடை மற்றும் உடல் பருமன் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக நிதி ஆயோக்கின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஆய்வு நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ள நிதி ஆயோக், அதிகரிக்கும் உடல் பருமன் பிரச்னையை தடுக்க அதிக உப்பு, கொழுப்பு மற்றும் சர்க்கரை உள்ள உணவுப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பது குறித்து பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளது.

முன்னதாக, தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி, உடல் பருமன் உள்ள பெண்களின் சதவிகிதம் 2015-16இல் 20.6ஆக இருந்த நிலையில், 2019-20இல் 24 சதவிகிதமாக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல, உடல் பருமன் உள்ள ஆண்களின் சதவிகிதம் 18.4 சதவிகிதத்தில் இருந்து 22.9 சதவிகிதமாக அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.