இந்தியா

“என்னை பயன்படுத்தி கைலாசத்தை உருவாக்குகிறார் பரமசிவன்” - நித்யானந்தா புது வீடியோ

“என்னை பயன்படுத்தி கைலாசத்தை உருவாக்குகிறார் பரமசிவன்” - நித்யானந்தா புது வீடியோ

rajakannan

தம் மீது குற்றம்சாட்டுபவர்கள் முட்டாள்கள் என நித்யானந்தா தெரிவித்துள்ளார். வழக்கம் போல் சமூக வலைதளத்தில் உரையாற்றிய அவர், தாமே மனிதத்தின் எதிர்காலம் எனக்கூறினார்.

நித்யானந்தா கைலாசாவில் இருக்கிறார். ஆனால் அந்தக் கைலாசா எங்கேயிருக்கிறது? அது தனி நாடா? இல்லையா? போன்ற வினாக்களுக்கான விடை மத்திய மாநில அரசுகளிடம் இல்லை. இவ்வளவு ஏன் எதைப்பற்றித் தேடினாலும் ஏதேனும் ஒரு பதிலைத் தரும் கூகுளே நித்யானந்தாவின் கைலாசா இருக்குமிடத்தைப் பற்றிக் கேட்டால் CONFUSE ஆகிவிடுகிறது. 

நித்யானந்தா எங்கே இருக்கிறார் என்பதை 12ஆம் தேதிக்குள் கண்டறிய வேண்டும் என கர்நாடக காவல்துறைக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் கெடு விதித்திருக்கிறது. என்ன செய்வது என கர்நாடக காவல்துறை கையைப் பிசைந்து கொண்டிருக்க நித்யானந்தாவோ கூலாக YOUTUBE-ல் உரையாற்றி இருக்கிறார். தனது பேச்சுக்கு நடுவே அவ்வப்போது இடைவெளி விடுவது, கைகளில் அணிந்துள்ள ருத்ராட்சத்தை சரி செய்வது, கைக்கு ஆதரவாக தண்டத்தை வைத்துக்கொள்வது என மேனரிசத்தோடு பேசுகிறார் அவர்.

நித்யானந்தா தனது வீடியோவில், “எனது சீடர்கள் என்னை நினைத்து பரணி தீபத்தை கையில் ஏந்தியபடி ஆசிரமத்தைச் சுற்றி வருகிறார்கள். உண்மையான கைலாசத்தை நான் உருவாக்குகிறேன். எனது உடலைப் பயன்படுத்தி பரமசிவன் இவ்வுலகில் கைலாசத்தை உருவாக்குகிறார்.

E-ஸ்ரீகைலாசா திட்டத்தை தொடங்குகிறோம். இது ஒரு நாட்டின் குடியுரிமை அல்ல. கைலாசா என்பது எல்லைகளற்ற ஆன்மிக பெருவெளி. கைலாசா மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நீங்கள் உங்கள் செல்லப்பிராணிகளையும் கைலாசாவில் இணைக்கலாம். அவற்றுக்கும் சிறப்பு பரிசுகள் காத்திருக்கின்றன.

ஒவ்வொருமுறையும் நம் மீது பழி சுமத்தப்படும் போது நாம் நேர்மையானவர்கள் என மெய்ப்பிக்கிறோம். அதன் மூலம் நமது புகழ் உயருகிறது. மேலும் மேலும் பலர் நம் மீது நம்பிக்கை வைக்கிறார்கள். கைலாசா மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒருவரை தாக்குபவர்கள் சரித்திரம் படைக்க மாட்டார்கள். தாக்குதலை எதிர்கொள்பவர்தான் வரலாறு படைப்பார். முட்டாள்கள்தான் ஒருவரை தாக்குவார்கள். நாம்தான் மனிதத்தின் எதிர்காலம்” என கூறியுள்ளார்.

கன்னித்தீவு கதை முடிந்தாலும் நித்யானந்தாவின் கைலாசா தீவு கதை முடியாது என்பது போல தொடர்ந்து கொண்டே இருக்கிறது.