இந்தியா

'100 லக்ஸுரி ரூம்கள் ப்ரீ-புக்கிங்...' - புதிய எம்.எல்.ஏ.-க்களுக்கு நிதீஷ் அரசு 'தாராளம்'!

webteam

முதல்முறையாக எம்.எல்.ஏக்கள் ஆகி உள்ளவர்களுக்கு பீகார் அரசு பணத்தை தண்ணீராக செலவழிக்க உள்ளதாக பீகார் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பீகாரில் நிதீஷ் குமார் தலைமையினா அரசு அமைந்து இன்றோடு நான்கு நாள்கள் ஆகின்றன. 17-வது சட்டமன்றமாக அமைந்துள்ள இந்த அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் நவம்பர் 23 முதல் 27 வரை நடைபெற இருக்கிறது. அன்றைய தினத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து, சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். அதேபோல், ஆளுநரும் உரை நிகழ்த்த இருக்கிறார்.

இதற்கிடையில், இந்தக் கூட்டத் தொடரில் கலந்துகொள்ள வரும் புதிய எம்.எல்.ஏ-க்களுக்காக நிதீஷ் அரசு தாராள செலவு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 243 உறுப்பினர்கள் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு முதல் முறையாக எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சுமார் 38 சதவீதம் பேர். இந்த எம்.எல்.ஏ.க்களுக்காக பீகார் தலைநகர் பாட்னாவின் லக்ஸுரி ஹோட்டல்களில் 100 ரூம்களை ப்ரீ - புக்கிங் செய்துள்ளது பீகார் அரசு. பெரும்பாலோர் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.-க்களாக இருப்பதால் அவர்களுக்கு பாட்னாவில் தங்க இடம் இருக்காது என்பதால் இந்த சலுகை கொடுக்கப்படுவதாக தெரிகிறது.

எம்.எல்.ஏ.க்கள் ஹோட்டலில் தங்க, சட்டமன்ற செயலகத்திற்கு கடிதம் கொடுக்க வேண்டும். இதற்குப் பிறகு அவர்களுக்கு அறை ஒதுக்கப்படும். இதற்கு முன்பும் சட்டமன்றத் தேர்தலுக்கும் பின்னர் முதல் அமர்வின்போது, புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு இதுபோன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில், இந்த முறையும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புதிய எம்.எல்.ஏ.-க்கள் போக மீதமுள்ள ரூம்கள் மற்ற எம்.எல்.ஏ.-க்களுக்கு கொடுக்கப்பட இருக்கிறது. பாட்னாவில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் ரூம்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. சகல வசதிகளும் இந்த ஹோட்டல்களில் கிடைக்கும் என்று பீகார் ஊடகங்கள் கூறியுள்ளன.

'பல வருடங்களாக நிதீஷ் அரசு முதல் சட்டமன்ற அமர்வுக்கு இதுபோன்ற வீண் செலவை செய்து வருகின்றன. இதற்கு லட்சங்களில் கட்டணங்கள் வருகின்றன. இதனை அரசுதான் செலுத்தவேண்டி இருக்கிறது' என்று பீகார் சமூக ஆர்வலர்கள் கொதிக்கிறார்கள்.