ஹலால் முறையை போலவே, 'மல்ஹார்' சான்று வழங்கும் நடைமுறையை மகாராஷ்டிரா அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா அமைச்சர் நிதேஷ் ராணே திங்கள்கிழமை அன்று வெளியிட்ட அறிவிப்புதான் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், “ மகாராஷ்டிராவில் உள்ள இந்து சமுதாயத்தினருக்காக முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முற்றிலும் இந்துக்களால் நடத்தப்படும் சரியான ஆட்டிறைச்சி கடைகளை அடையாளம் காண ‘மல்ஹர்’ சான்றிதழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இறைச்சியில் கலப்படம் இல்லை என்பதை உறுதி செய்யவும் இது உதவும். இந்துக்கள் மல்ஹர் சான்றிதழ் பெற்ற கடையில் ஆட்டிறைச்சி வாங்க வேண்டும். இந்த சான்றிதழ் பெறப்படாத கடையில் ஆட்டிறைச்சி வாங்குவதை தவிர்க்க வேண்டும். மேலும் இந்த முயற்சி இந்து சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடையவும் உதவும். ” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இவரது இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
ஜட்கா இறைச்சி சப்ளையர்களுக்கான சான்றிதழ் தளம், MalharCertification.com உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விற்பனை நிலையங்கள் 100 சதவீதம் இந்துக்கள் நடத்துவது என்றும் ரானே கூறியுள்ளார்.
ஹலால் இறைச்சிக்கு கடைபிடிக்கப்படும் அதே விதிகள் தான், 'மல்ஹார்' சான்றுக்கும் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், ஹிந்துக்கள் நடத்தும் ஆட்டிறைச்சி கடைகளுக்கு மட்டுமே இந்த சான்று வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது.