nirmala sitaraman
nirmala sitaraman pt web
இந்தியா

“ஜெயலலிதாவை அவமதித்தவர்கள்தானே நீங்கள்? திமுக மறந்துவிட்டதா?”- மக்களவையில் நிர்மலா சீதாராமன் பேச்சு

ஜெ.நிவேதா , PT WEB

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நேற்று முன்தினம் தொடங்கியது. மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. இத்தீர்மானம் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஆளும் கட்சி உறுப்பினர்களும் காரசாரமாக ஈடுபட்டனர். இதில் இரண்டாம் நாள் விவாதத்தில் (நேற்று) காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி உரையாற்றினார்.

Nirmala Sitharaman

இன்று மூன்றாவது நாள் விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அப்போது மக்களவையில் இருந்து திமுக - காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

“மதுரை எய்ம்ஸ் தாமதம்: பழியை மாநில அரசுதான் ஏற்கவேண்டும்”

“தமிழ்நாட்டை பற்றி நிறைய பேச வேண்டி இருக்கிறது. மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில், நிலம் கையகப்படுத்தியதில் தமிழ்நாடு அரசு தாமதம் செய்தது. எய்ம்ஸ் கட்டுமானத்திற்காக ரூ.1,200 கோடி ரூபாயில் இருந்து ரூ.1,900 கோடி வரை பட்ஜெட் சென்றபோதும், பணிகள் இன்னும் நடக்காமல் இருப்பதற்கான பழியை மாநில அரசுதான் ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர மத்திய அரசு அதற்கு பொறுப்பேற்காது.

“பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா உள்ளது”

இந்திய பொருளாதாரம் வலுவாக இருப்பதாக ஆய்வு நிறுவனங்களின் அறிக்கை தெரிவிக்கின்றன. 2023 - 24 நிதியாண்டில் உள்நாட்டு உற்பத்தி 6.5% ஆக இருக்கும் எனவும் கணித்திருக்கிறார்கள். உலகிலேயே பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா உள்ளது. மத்திய அரசின் கொள்கைகளால் கடந்த 9 ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

ஜெயலலிதா - திரௌபதி ஒப்பீடு

கனிமொழி இந்த அவையில் மகாபாரதத்தில் இருந்து திரௌபதியைப் பற்றி பேசினார். ஆம், மகாபாரதத்தில் திரௌபதி அவமானப்படுத்தப்பட்டார். நான் மறுக்கவில்லை. பெண்களை பொறுத்தவரையில், மோசமாக அவர்கள் நடத்தப்படுவதும் தவறாக விமர்சிக்கப்படுவதும் எங்கள் ஒவ்வொருவருக்கும் வலியையே தருகிறது. இந்த அவைக்கும் கனிமொழிக்கும் நான் ஒரு நிகழ்வை நினைவுகூற விரும்புகிறேன். அதுவும், புனிதமான தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்த மார்ச் 25, 1989-ல் நடந்த முக்கியமான ஒரு நிகழ்வை நினைவுகூற விரும்புகிறேன்.

அன்றைய தினம் பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவின் சேலை அங்கிருந்தவர்களால் இழுக்கப்பட்டது. அப்போது அதை பார்த்துக்கொண்டிருந்த திமுக உறுப்பினர்கள், அவரைப்பார்த்து சிரித்தனர்... நகைத்தனர்! அப்படியான நீங்கள், இன்று கௌரவ சபா பற்றி பேசுகிறீர்கள்?! நீங்கள் திரௌபதி பற்றி பேசுகிறீர்கள்?! திமுக, ஜெயலலிதாவை மறந்துவிட்டதா? நீங்கள்தானே ஜெயலலிதாவை அவமதித்தீர்கள்.

நிர்மலா சீதாராமன்

அந்த நாளில்தான் ஜெயலலிதா ‘இனி நான் முதல்வராகாமல் அவைக்கு வரமாட்டேன்’ எனக்கூறி சென்றார். சொன்னபடியே செய்தார். அன்று ஜெயலலிதாவை பேசியவர்கள், இன்று திரௌபதி பற்றி பேசுவது, அதிர்ச்சியாக இருக்கிறது.

கனிமொழி நேற்று பேசுகையில், ‘அன்று திரௌபதியை காக்க கிருஷ்ணர் வந்தார். அப்போது கிருஷ்ணர் ‘இங்கு அமைதி காத்த அனைவருக்கும் தண்டனை கிடைக்குமென்றார்’ எனக்கூறினார். எனில் அன்று தமிழக சட்டப்பேரவையில் அமைதிகாத்தவர்கள் யார்? திமுக உறுப்பினர்களில்லையா? அவர்களுக்கு தண்டனை கிடைக்காதா?

செங்கோலை ஏற்கமுடியாதா?

தமிழ்நாட்டில் இந்தி, சமஸ்கிருதம் கற்கக்கூடாது என்ற திணிப்பு இருந்தது. பிரதமர் மோடி புறநானூறு, திருக்குறள் உள்ளிட்டவை பேசி தமிழை பெருமைப்படுத்தியுள்ளார். சிலப்பதிகாரம் நாம் அனைவரும் தமிழர்கள் என்றே சொல்கிறது. திராவிடர்கள் என்றல்ல. அப்படியான ஆட்சியைதான் பிரதமர் மோடி கொடுத்து வருகிறார்.

சுதந்திரம் வழங்கப்பட்ட போது தனக்கு வழங்கப்பட்ட செங்கோலை, கைத்தடியாக பயன்படுத்தினார் நேரு. அது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி இல்லையா? செங்கோலை நாடாளுமன்றத்தில் பெருமைமிகு இடத்தில் மோடி வைத்தால் ஏற்க முடியாதா?” என்றார்.

மாலை பேசுகிறார் மோடி!

இந்நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று வர உள்ள நிலையில் அவருக்கு மக்களவையில் சிறப்பான வரவேற்பு அளிக்க பாஜக எம்.பி.க்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் அவைக்கு வரும்போது எம்.பி.க்கள் எழுந்து நின்று "மோடி, மோடி" என முழக்கம் எழுப்பி மேசைகளைத் தட்டி பிரதமரை வரவேற்க திட்டமிட்டுள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பி.க்களும் இதில் பங்கேற்பார்கள் என பாஜக உறுப்பினர்கள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.