இந்தியா

வாக்குப்பதிவு இயந்திரம்: ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி!

webteam

தொழில்நுட்பத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருவது காங்கிரஸ் தான் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சுக்கு, பதிலளிக்கும் வகையில் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார். அதன்படி, விவசாயக் கடன் தள்ளுபடி என்ற தவறான முடிவை காங்கிரஸ் அரசு எடுத்ததாக அவர் கூறியுள்ளார். அதனால் தான் விவசாயிகள் அதற்கடுத்து கடன் பெற இயலவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். 

தொழில்நுட்பத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது காங்கிரஸ் கட்சி என்று குற்றம்சாட்டிய அவர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவையில்லை என்று காங்கிரஸ் கட்சி கூறுவதை விமர்சித்தார். வெளிப்படைத்தன்மையில் காங்கிரஸ் கட்சிக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்ற நிர்மலா சீதாராமன், பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் உரிய வளர்ச்சியை எட்டியுள்ளதாகக் கூறினார். கறுப்புப் பணத்திற்கு எதிராக மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், ஜிஎஸ்டி, மின்னணு பரிவர்த்தனை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு வரிவருவாய் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.