இந்தியா

பட்ஜெட்டில் ஓங்கி ஒலித்த புறநானூற்றுப் பாடல் ! நிர்மலா சீதாராமன் பேச்சு

பட்ஜெட்டில் ஓங்கி ஒலித்த புறநானூற்றுப் பாடல் ! நிர்மலா சீதாராமன் பேச்சு

webteam

மத்திய பட்ஜெட்டின் போது புறநானூறு பாடல் ஒன்றை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கோள் காட்டி பேசினார்

மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துவருகிறார். அப்போது வரி செலுத்தும் ஒவ்வொரு இந்தியருக்கும் எனது நன்றி. நாட்டின் கனவுகளை அடைய வரி செலுத்துபவர்கள் தான் முக்கிய காரணியாக இருக்கிறார்கள். இதற்கு புறநானூறு பாடலை அமைச்சர் மேற்கோள் காட்டியுள்ளார். "யானை புகுந்த நிலம்" என்ற பாடலைக் குறிப்பிடுகிறார். யானை நிலத்துக்குள் புகுந்தால் அது உண்ணுவதை விட வீணாக்குவது அதிகமாக இருக்கும் என்று விளக்குகிறார் நிர்மலா சீதாராமன். 

அதாவது பாண்டியன் அறிவுடை நம்பி தன் குடிமக்களைத் துன்புறுத்தி அவர்களிடம் வரி வாங்கினான். அவனிடம் சென்று அவன் தவறுகளை எடுத்துரைத்து அவனைத் திருத்த யாரும் முன்வரவில்லை. அந்நிலையில், அறிவுடை நம்பியிடம் சென்று அவனுக்கு அறிவுரை வழங்குமாறு அந்நாட்டு மக்கள் பிசிராந்தையாரை வேண்டினர். அவரும் குடிமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அறிவுடை நம்பியிடம் சென்று ஒரு அரசன் எவ்வாறு வரியைத் திரட்ட வேண்டும் என்று அறிவுரை கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

இந்தப் பாடலின் பொருள்,  விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால், ஒருமா அளவுக் கூட இல்லாத நிலத்தில் விளைந்த நெல்கூட பல நாட்களுக்கு யானைக்கு உணவாகும். ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால் , யானை தின்பதைவிட யானையின் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும். அரசன் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும். அரசன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக அன்பு கெடுமாறு, நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்பினால், யானை புகுந்த நிலம் போலத் தானும் பயனடையாமல் உலகமும் (தன் நாடும்) கெடும் என்பதாகும்.

நிர்மலா சீதாராமனின் இந்தப் புறநானூற்றுப் பாடல் வரிகளும், அவர் விளக்கிய பாடலின் பொருளும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தமிழக எம்பிக்களான ஆ.ராசாவும், தயாநிதி மாறன், வசந்த குமார் ஆகியோர் கூர்ந்து கவனித்து மேஜயை தட்டி வரவேற்றனர்.