இந்தியா

ஏழைகள் , தொழிலாளர்களுக்காக ரூ. 1.70 லட்சம் கோடி சலுகை தொகுப்பு - நிர்மலா சீதாராமன்

webteam

கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள், தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி சலுகை தொகுப்பு ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ. 50 லட்சத்துக்கு மருத்துவ காப்பீடு, 80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ அரிசியுடன் அடுத்த 3 மாதங்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும். வீடுகள் தோறும் கூடுதலாக 3 மாதங்களுக்கு ஒரு கிலோ பருப்பு வழங்கப்படும். விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் வழங்கப்படும் நிலையில், முதல் தவணை உடனடியாக வழங்கப்படும். ஊரடங்கு காலத்தில் ஏழைகள் யாரும் உணவின்றி தவிக்கக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு 3 மாதங்களுக்கு தலா 500 ரூபாய் வழங்கப்படும். உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு இலவசமாக சிலிண்டர் வழங்கப்படும். பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் உத்தரவாதமில்லாத கடன் ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது. அமைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை 3 மாதங்களுக்கு அரசே செலுத்தும்” என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.