இந்தியா

கருணை மனுவை திரும்ப பெறுவதாக நிர்பயா குற்றவாளி அறிவிப்பு

jagadeesh

நிர்பயா கொலைக் குற்றவாளி வினய் சர்மா, தான் அனுப்பி வைத்த கருணை மனுவை திரும்பப் பெறுவதாகக் கூறி, குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

டெல்லியில் ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் தூக்கி வீசப்பட்ட பெண், உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. குற்றவாளிகளில் ஒருவரான 23 வயது வினய் சர்மா, தனது மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியதாக தகவல் வெளியானது. 

மேலும், இந்த கருணை மனுவை உள்துறை அமைச்சகம் நிராகரித்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், தான் அனுப்பிய கருணை மனுவை திரும்பப் பெறுவதாகக் கூறி, குடியரசுத் தலைவருக்கு வினய் சர்மா கடிதம் அனுப்பியுள்ளார். அதில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்யவிருப்பதால், கருணை மனுவை திரும்ப பெறுவதாக குறிப்பிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம், உள்துறை அமைச்சகம் மூலம் அனுப்பிய கருணை மனுவில் இருப்பது தமது கையெழுத்தே இல்லை என்றும் வினய் சர்மா தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.