குஜராத் மாநிலம், அகமதாபாத் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 9 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளன. மருத்துவர்கள் பணியில் இல்லாததால் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அகமதாபாத் நகரின் அசர்வா பகுதியில் இந்த அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. உயிரிழந்ததில் 4 பெண், 5 ஆண் குழந்தைகள் அடங்கும். குறைந்த எடையுடன் பிறந்ததே குழந்தைகளின் இறப்புக்கு காரணம் என்றும் மருத்துவர்கள் பணியில் இல்லாதது காரணம் அல்ல என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், இறந்தவர்களில் 5 குழந்தைகள் ஆபத்தான நிலையில், தனியார் மருத்துவமனைகளில் இருந்து பரிந்துரை செய்யப்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மருத்துவமனை கண்காணிப்பாளர் பிரபாகர் கூறுகையில், “தீபாவளி விடுமுறை நாட்களில் இருந்து பெரும்பாலான தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலை செய்யவில்லை. அதனால், பலரும் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள். அதில் பெரும்பாலான குழந்தைகள் எடை குறைவாக பிறந்தவை. ஒவ்வொரு குழந்தையும் ஒரு கிலோவுக்கு குறைவான எடை கொண்டவை. எங்கள் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டரிலோ அல்லது பாதுகாப்பு அறைகளிலோ பிரச்சனைகள் எதுவும் இல்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும்” என்றார்.
கடந்த சில ஆண்டுகளில் ஒரே நாளில் அதிக குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தற்போது தான் நடைபெற்றுள்ளதாக மருத்துவமனை உதவி பேராசிரியர் அனுயா சவுகன் தெரிவித்துள்ளார். குழந்தைகள் உயிரிழப்பு குறித்து, விசாரணையை தொடங்கியுள்ளதாக அம்மாநில சுகாதரத்துறை ஆணையர் ஜெயந்தி ரவி தெரிவித்தார்.
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் சுமார் 70 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், தற்போது அகமதாபாத் அரசு மருத்துவமனையில் 9 குழந்தைகள் 24 மணி நேரத்தில் பலியாகியுள்ளன.