இந்தியா

ஒன்பது மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கொடூரன்

ஒன்பது மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கொடூரன்

webteam

தெலங்கானாவில், ஒன்பது மாத கைக்குழந்தையை 28 வயது இளைஞர், பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது.

தெலங்கானாவின் ஹைதராபாத் அருகே உணவு விடுதி நடத்தி வ‌ரும் தம்பதியின் ஒன்பது மாதக் குழந்தை, நேற்றிரவு வழக்கம் போல பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்தது. நள்ளிரவு ஒரு மணிக்கு குழந்தையின் தாய் எழுந்து பார்த்தபோது, குழந்தையைக் காணவில்லை. அந்த நேரத்திலேயே குழந்தையை பல இடங்களில் பெற்றோர் தேடினர். 

அப்போது ஒரு தெருவில் குழந்தையின் அழுகுரல் கேட்டதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது, பிரவின் என்ற 28 வயது இளைஞர் குழந்தையை எடுத்துக் கொண்டு ஓடினார். இவர்களை பார்த்ததும் குழந்தையை விட்டுவிட்டு பிரவின் தப்பியோடினார். அவரை விரட்டிப் பிடித்த பொதுமக்கள் அனுமகொண்டா காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். 

இதற்கிடையே, குழந்தை உடலில் உள்ள ரத்தத்தைக் கண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆ‌னால், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தையை அந்த இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று கொன்றதாக தெரிய வந்தது. 

இந்தக் கொடூரமான நிலைக்குக் காரணமான பிரவினுக்கு மரண தண்டனை விதிக்க பெற்றோரும், பொதுமக்களும் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளனர். பிடிபட்ட பிரவினை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.