இந்தியா

சபரிமலை வழக்கு - 56 சீராய்வு மனுக்கள் மீது இன்று முதல் விசாரணை

webteam

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையை, 9 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசமைப்பு சாசன அமர்வு இன்று முதல் மேற்கொள்கிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த 2018ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதை கேரள அரசு அமல்படுத்திய நிலையில் பாரம்பரியத்திற்கும் மத நம்பிக்கைகளுக்கும் எதிரானதாக இந்த தீர்ப்பு அமைப்புள்ளதாக கூறி போராட்டங்களும் நடைபெற்றன.

இந்நிலையில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 56 சீராய்வு மனுக்கள் உட்பட 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு சாசன அமர்வு விசாரணையை 9 நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு சாசன அமர்வுக்கு மாற்றுவதாக கடந்த நவம்பர் மாதம் தெரிவித்தது.

இஸ்லாமிய மற்றும் பார்சி மத வழிபாட்டிடங்களில் பெண்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக தொடரப்பட்டுள்ள பிற வழக்குகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருப்பதால் 9 நீதிபதிகள் கொண்ட விரிவான அமர்வுக்கு சீராய்வு மனுக்கள் மாற்றப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்து, இஸ்லாமிய உள்ளிட்ட மதங்களின் வழிபாட்டிடங்களில் பெண்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவது உள்ள சர்ச்சையில் உறுதியான ஒரு தீர்ப்பை இம்முறை உச்ச நீதிமன்றம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை சீராய்வு மனுவை விசாரித்த அமர்வில் இருந்த நீதிபதிகள் ஒருவர் கூட தற்போது அமைக்கப்பட்டுள்ள அமர்வில் இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது