இந்தியா

கேரளாவில் இரவு நேர ஊரடங்கு: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இரவு 10 வரை மட்டுமே அனுமதி

kaleelrahman

புத்தாண்டு வருவதையொட்டி டிசம்பர் 30 முதல் ஜனவரி 2 வரை கேரளாவில் இரவு நேரக் கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் 2020 மற்றும் 2021ஆம் ஆண்டு ஓணம் பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட தளர்வுகளால் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி தினசரி தொற்று 41 ஆயிரத்தை கடந்து பதிவானது. தொடர்ந்து வந்த புத்தாண்டு கொண்டாட்டங்களும் கேரளாவின் நோய்த்தொற்று குறையாமல் இருப்பதற்கு காரணமாக அமைந்தன.

இந்த சூழலில் இந்த ஆண்டு கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இரவு நேரக் கட்டுப்பாடுகளை அறிவித்து கேரள அரசு உத்தரவிட்டிருக்கிறது. டிசம்பர் 30 முதல் 2022 ஜனவரி இரண்டாம் தேதி வரை இரவு நேர கட்டுப்பாடுகள் குறித்து கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு டிசம்பர் 31 இரவு 10 மணி வரையே அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட நேரம் வரையில் மட்டுமே பார்கள், கிளப்புகள், ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்கள் போன்றவை ஏற்கேனவே உள்ள 50 சதவீத இருக்கை வசதிகளுடன புதிய நேரக் கட்டுப்பாட்டுடன இயங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அதிக கூட்டம் கூடும் கடற்கரை, ஷாப்பிங் மால் போன்றவற்றில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பிற்கும் கண்காணிப்பிற்கும் மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட வேண்டும் என கேரள முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.