அரபிக் கடலில் உருவாகியுள்ள நிசர்கா புயல் நாளை பிற்பகல் கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது.
இந்தப் புயல் தற்போது அரபிக்கடலின் வடக்கு வடமேற்கு திசையில் 11 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. மும்பையில் இருந்து தெற்கு தென்மேற்கு திசையில் 570 கிலோ மீட்டர் தொலைவிலும், குஜராத்தின் சூரத் நகரில் இருந்து 800 கிலோ மீட்டர் தெற்கு தென்மேற்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் இது தீவிர புயலாக வலுப்பெற்று வடக்கு திசை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் வளைந்து வடக்கு வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து, வடக்கு மகாராஷ்டிரா மற்றும் குஜராத் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஹரீஹரேஷ்வர் மற்றும் டாமன் இடையே அலிபாக் பகுதிக்கு அருகில் நாளை பிற்பகல் கரையை கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரையைக் கடக்கும் போது 100 முதல் 120 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனப்பட்டுள்ளது.