இந்தியா

“காந்திக்கு எதிரானவர்களை கிண்டல் செய்தேன்” - பெண் ஐஏஎஸ் அதிகாரி விளக்கம்

webteam

காந்தி - கோட்சே குறித்த தன்னுடைய கருத்து தவறாக திரிக்கப்பட்டுள்ளது என பெண் ஐஏஎஸ் அதிகாரி நிதி சவுத்ரி விளக்கம் அளித்துள்ளார். 

மராட்டிய மாநில பெண் ஐஏஎஸ் அதிகாரி நிதி சவுத்ரி, மும்பை மாநகராட்சியில் துணை நகராட்சி ஆணையராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மாதம் 17-ம் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார். 

அதில், “மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி வழக்கத்தில் இல்லாத கொண்டாட்டங்கள் நடக்க இருக்கிறது. காந்தியின் உருவத்தை ரூபாய் நோட்டில் இருந்து நாம் நீக்குவோம். உலகம் முழுவதும் உள்ள காந்தியின் சிலைகள் அகற்றுவோம். அவரின் பெயரில் இருக்கும் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், சாலை அனைத்திற்கும் வேறு பெயர் வைப்போம். மகாத்மாவுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி இதுவாகத்தான் இருக்க முடியும். காந்தியை கொன்ற கோட்சேவுக்கு நன்றி” என தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, காந்திக்கு எதிராகவும், கோட்சேவுக்கு ஆதரவாகவும் நிதி சவுத்ரி கருத்து தெரிவித்ததாக கூறி அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர். சமூக வலைதளங்களிலும் அவருக்கு எதிராக கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டதால் ஐஏஎஸ் அதிகாரி நிதி சவுத்ரியை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஜிதேந்திர அவ்ஹத் வலியுறுத்தினார்.

இதனையடுத்து, இந்த விவகாரம் ஊடகங்களிலும் செய்தியாக வெளியானது. இந்த விவகாரம் இவ்வளவு சிக்கலாக காரணமே பிரக்யா தாகூரின் கோட்சே பற்றிய கருத்துதான். நாடாளுமன்றத் தேர்தலில் போபால் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பிரக்யா சிங் தாக்கூர், கடந்த மாதம் 16 ஆம் தேதி கோட்சே ஒரு தேச பக்தர் என கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். பாஜகவும் கடும் கண்டனத்தை பதிவு செய்தது.  அதற்கு அடுத்த நாள் மே 17 ஆம் தேதி ஐஏஎஸ் அதிகாரி நிதி சவுத்ரி காந்தி, கோட்சே தொடர்பான இந்த கருத்தை பதிவிட்டிருந்தார். எதிர்ப்புகள் கிளம்பவே தன்னுடைய கருத்தினை ட்விட்டரில் இருந்து நீக்கிவிட்டார்.

இந்த நிலையில்தான், காந்தி - கோட்சே தொடர்பாக தான் செய்த ட்வீட் திரித்து கூறப்பட்டுள்ளது எனவும்,  காந்தியை ஒருபோதும் மரியாதை குறைவாக பேசியதில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார். கோட்சேவுக்கு ஆதரவானர்களை கிண்டல் செய்யும் வகையிலே அந்த கருத்தினை பதிவிட்டதாகவும் கூறியுள்ளார். தனக்கு மிகவும் பிடித்த புத்தகம் ‘சத்திய சோதனை’ என கூறியுள்ள நிதி சவுத்ரி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தினை தொடர்ச்சியாக பார்த்தாலே காந்தியின் மீது தான் வைத்துள்ள மரியாதை புரியும் என அவர் கூறியுள்ளார்.