தமிழக-கேரள எல்லையில் குமரி மாவட்டம், களியக்காவிளை சாலையில் உள்ள சோதனைச் சாவடியில் பணியில் இருந்த களியக்காவிளை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கடந்த 2020, ஜனவரி மாதம் 8 ம் தேதி துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்பதால் இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டது.
தொடர்ந்து NIA அதிகாரிகள் மேற்கொண்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியான சிஹாபுதீன் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். அவருக்கு வயது 39. சென்னையை சேர்ந்த அவர் கத்தாரில் இருந்து சென்னைக்கு திரும்பியபோது சென்னை விமான நிலையத்தில் வைத்து NIA அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அவர் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதோடு, ஆயுதங்களை கொடுத்து உதவினார் எனவும் சொல்லப்பட்டது. அவரை கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக புலனாய்வு அதிகாரிகள் தேடி வந்த நிலையில் இப்போது கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் கைதாகியுள்ள ஆறு பேர் மீது கடந்த ஜூலை 10 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.