உணவகம், என்.ஐ.ஏ.
உணவகம், என்.ஐ.ஏ. ட்விட்டர்
இந்தியா

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு: பாஜக நிர்வாகிக்கு தொடர்பா?.. என்.ஐ.ஏ. தீவிர விசாரணை!

Prakash J

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு வைட் பீல்ட் அருகில் உள்ள, குந்தலஹாலி பகுதியில் இயங்கிவரும் பிரபல ’ராமேஸ்வரம் கபே’ உணவகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி மதியம் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இந்த விபத்தில் உணவகத்தில் பணிபுரிந்த 3 பேர், சாப்பிட வந்த பெண் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் உள்ள 18 இடங்களில் சோதனை நடத்தினர்.

இதில் முஷாமி ஷரீப் என்பவர் என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவர் குண்டுவெடிப்பு திட்டத்திற்கு துணையாக செயல்பட்டதை என்.ஐ.ஏ அதிகாரிகள் கண்டறிந்ததாகவும், முசாவீர் சாஹிப் ஹுசைன் மற்றும் அப்துல் மதீன் தாஹா எனும் மேலும் இரண்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தேடப்படும் இரண்டு நபர்களின் புகைப்படங்களை என்.ஐ.ஏ. அதிகாரப்பூர்வமாக வெளியிட்டதுடன், அதுகுறித்து தகவல் தெரிவித்தால் 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனவும் என்.ஐ.ஏ. அறிவித்திருந்தது.

இந்த நிலையில், குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கர்நாடகா மாநிலம் சிமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி சாய் பிரசாத்தை, இன்று (ஏப்ரல் 5) NIA அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கெனவே கைதானவர்களுடன் சாய் பிரசாத் தொடர்பில் இருந்ததால் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அவர் கைது செய்யப்படுவாரா என்று விசாரணைக்கு பின்பு தான் தெரியவரும். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: RSS, சங்பரிவார், பாஜக நிர்வாகிகளுக்குச் சொந்தமான 62% சைனிக் பள்ளிகள்.. RTI மூலம் வெளியான தகவல்!