இந்தியா

குண்டுவெடிப்பு நடத்த திட்டம் ! விசாரணையில் அதிர்ச்சி தரும் பல தகவல்கள்

குண்டுவெடிப்பு நடத்த திட்டம் ! விசாரணையில் அதிர்ச்சி தரும் பல தகவல்கள்

webteam

டெல்லி மற்றும் வட மாநிலங்களில் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டதாக 10 இளைஞர்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் 6 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் அதிர்ச்சி தரும் பல தகவல்கள் அடுக்கடுக்காக வெளியாகியுள்ளன

வட மாநிலங்களில் பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்த ஒரு கும்பல் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் கடந்த சில மாதங்களாகவே என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதில் கிடைத்த சில தகவல்கள் அடிப்படையில் அவர்கள் நேரடியாக களமிறங்கினர். டெல்லியிலும் உத்தர பிரதேசத்தில் அம்மாநில பயங்கரவாத தடுப்பு படையினர் உதவியோடும் என்ஐஏ அதிகாரிகள் 17 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 6 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் ஒன்றன்பின் ஒன்றாக தெரியவந்தன. 

டெல்லியில் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில் குண்டு வெடிப்பு நிகழ்த்தவும் முக்கிய பிரமுகர்கள் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் ஹர்கத் உல் ஹார்ப் இ இஸ்லாம் என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வீடுகளில் திருடி அந்த பணத்தைக் கொண்டு இந்த அமைப்பு நடத்தப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. ஐஎஸ் பயங்கரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்ட இந்த கும்பல் அதேபோல இந்தியாவிலும் ஒரு அமைப்பை நடத்த விரும்பியது தெரியவந்துள்ளது. 

உத்தர பிரதேசத்தின் அம்ரோகாவை சேர்ந்த முஃப்தி சோகாய் என்பவர் இந்த இயக்கத்தை தலைமையேற்று நடத்தியதும் தெரிய வந்துள்ளது. கைதானவர்கள் பதுங்கியிருந்த இடத்திலிருந்து ஏராளமான வெடிபொருட்களும் சிக்கியுள்ளன. இதற்கிடையில் சோதனையின்போது சிலர் தப்பி ஓடியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி - உ.பி, டெல்லி - ஹரியானா செல்லும் சாலைகளில் அதிகப்படியான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிடிபட்ட பயங்கரவாத கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் விவரம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 25 குண்டுகள் செய்யத் தேவையான பொட்டாசியம் நைட்ரேட், கந்தகம் உள்ளிட்ட வெடிமருந்துகள் சோதனையில் சிக்கின. இதோடு டைம் பாம்களை குறித்த நேரத்தில் வெடிக்க வைக்க உதவியாக 120 அலாரம் கடிகாரங்களும் கைப்பற்றப்பட்டன.

இது தவிர உள்நாட்டில் தயாரான ராக்கெட் லாஞ்ச்சர்கள், கைத்துப்பாக்கிகள், தற்கொலைப்படையினர் அணியும் பிரத்யேக உடை உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தவிர ரிமோட் கன்ட்ரோல் மூலம் குண்டு வெடிக்கச் செய்யும் தொழில்நுட்பத்தையும் அவர்கள் பெற்றிருந்தது தெரியவந்தது. கைதானவர்களிடம் இருந்து ஏழரை லட்சம் ரூபாய் பணம், 135 சிம் கார்டுகள், 100 மொபைல் ஃபோன்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.