இந்தியா

’2 கூடுதல் சப்பாத்தி போதும்’ - ஏழைகளின் பசியைப் போக்க ஃபிரிட்ஜ் பொருத்திய தன்னார்வ அமைப்பு

EllusamyKarthik

தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. அவரது வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வகையில் மும்பை மாநகரில் உள்ள ஏழைகள் மற்றும் வீடற்றவர்களுக்கு  உணவளிக்கும் வகையில் சமுதாய ஃபிரிட்ஜ் ஒன்றை அமைத்துள்ளது AMAFHHA என்ற தன்னார்வ அமைப்பு. 

"உணவின்றி பசியால் வாடும் மக்களின் பசிப்பிணியை போக்கும் அட்சய பாத்திரமாக இந்த ஃபிரிட்ஜ் செயல்படும். உணவு வீணாவதை  கட்டுப்படுத்துவதற்கான மாற்று வழியாகவும் இது உள்ளது. ஒருவர் அவர்களது வீட்டில் சமைத்து அவர்களது தேவைக்கு போக மீதமுள்ள கெடாத உணவை குப்பையில் கொட்டாமல் இந்த ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் உணவு உண்ணாமல் இருப்பவர்கள் அதனை பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற யோசனையில் இதை அமைத்துள்ளோம். 

ஒரு குடும்பம் இரண்டு கூடுதல் சப்பாத்திகளை சமைத்து வைத்தால் கூட இந்த பகுதியில் உள்ள ஏழைகள் பசியுடன் தூங்குவதை தடுக்கலாம். தொடர்ந்து இதே போல மும்பை மாநகரின் பல்வேறு இடங்களில் வைத்து மும்பையை பசியில்லா நகரமாக மாற்ற உள்ளோம்” என தெரிவித்துள்ளார் AMAFHHA அமைப்பின் தலைவர் ஜோஹ்ரா மோர்பிவாலா.

தற்போது இந்த கம்யூனிட்டி ஃபிரிட்ஜ் மும்பையின் பிளாசம் ஹவுசிங் சொசைட்டியின் காம்பவுண்ட் சுவருக்கு அருகில் வைக்கப்பட்டுள்ளது.