இந்தியா

அடுத்த காங்கிரஸ் தலைவர் இன்றிரவு அறிவிப்பு?

அடுத்த காங்கிரஸ் தலைவர் இன்றிரவு அறிவிப்பு?

webteam

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் இன்று இரவுக்குள் அறிவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று காலை கூடியது. இதில் ‌கட்சியின் முன்னணி தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங், குலாம்நபி ஆசாத், ப.சிதம்பரம், ஆதிர் ரஞ்ஜன் சவுத்ரி, பிரியங்கா காந்தி, ஜோதிர்‌ ஆதித்ய சிந்தியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். 

காங்கிரஸ் காரியக் கமிட்டியில் 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான ஆலோசனை நடைபெற்றது. மதியம் சுமார் 12.30 மணியளவில், காரியக் கமிட்டிக் கூட்டத்திலிருந்து சோனியா காந்தியும், ராகுலும் வெளியேறினார்கள். கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான குழுவில் தங்களின் பங்களிப்பு தேவையில்லை என்பதால் கூட்டத்திலிருந்து வெளியேறியதாக சோனியா காந்தி விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக இன்று இரவு 8.30 மணியளவில் காங்கிரஸ் காரிய கமிட்டி மீண்டும் கூடுகிறது. அதன் முடிவில் அடுத்த காங்கிரஸ் தலைவர் யார் என்பதை அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.