பி.ஆர்.கவாய் PTI
இந்தியா

மே 14-ல் பொறுப்பேற்கிறார் உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி.. யார் இந்த பி.ஆர்.கவாய்?

தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பதவிக் காலம் மே 13-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமிக்க மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பரிந்துரை வழங்கியுள்ளார்.

Prakash J

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய் (பி.ஆர்.கவாய்) பதவியேற்க இருக்கிறார். தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பதவிக் காலம் மே 13-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமிக்க மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பரிந்துரை வழங்கியுள்ளார். குடியரசுத் தலைவரின் ஒப்புதலை அடுத்து மே 14-ஆம் தேதி 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்க உள்ளார்.

பி.ஆர்.கவாய்

யார் இந்த பி.ஆர்.கவாய்?

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் நவம்பர் 24, 1960 அன்று பிறந்த நீதிபதி கவாய், 1985இல் தனது சட்டப் பணியைத் தொடங்கினார். 1987இல் மும்பை உயர் நீதிமன்றத்தில் பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்பு, முன்னாள் அட்வகேட் ஜெனரலும் உயர் நீதிமன்ற நீதிபதியுமான மறைந்த ராஜா எஸ்.போன்சாலேவுடன் ஆரம்பத்தில் பணியாற்றினார். நீதிபதி கவாய் அரசியலமைப்பு மற்றும் நிர்வாகச் சட்டத்தில் கவனம் செலுத்தினார். ஆகஸ்ட் 1992இல், அவர் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வில் உதவி அரசு வழக்கறிஞராகவும் கூடுதல் அரசு வழக்கறிஞராகவும் நியமிக்கப்பட்டார்.

பின்னர், 2000ஆம் ஆண்டில் அதே அமர்வில் அரசு வழக்கறிஞராகவும் ஆனார். நீதிபதி கவாய் நவம்பர் 14, 2003 அன்று பம்பாய் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மேலும் 2005இல் நிரந்தர நீதிபதியானார். மும்பையில் உள்ள உயர் நீதிமன்றத்தின் முதன்மை இருக்கையிலும், நாக்பூர், அவுரங்காபாத் மற்றும் பனாஜியில் உள்ள அமர்வுகளிலும் பணியாற்றினார். மே 24, 2019 அன்று உச்ச நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெற்றார். மே 14 அன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கும் நீதிபதி கவாய், நவம்பர் 23, 2025 அன்று ஓய்வு பெறும் வரை இந்தப் பதவியில் இருப்பார்.