இந்தியா

ஊரடங்கிற்கு பிறகு விமானத்தில் செல்லலாம் என நினைப்பவரா நீங்கள்..? கெடுபிடிக்கு வாய்ப்பு

ஊரடங்கிற்கு பிறகு விமானத்தில் செல்லலாம் என நினைப்பவரா நீங்கள்..? கெடுபிடிக்கு வாய்ப்பு

webteam

ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்த பின்பும் விமான நிலையங்களிலும், விமானங்களிலும் சமூக விலகலை கடைபிடிக்க பயணிகளுக்கு கடுமையான கெடுபிடிகள் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளன.

போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்கிய பின்னரும் பல மாதங்களுக்கு விமானங்களில் கடுமையான விதிகளைப் கடைபிடிக்க வேண்டியிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பயணிகள் விமானங்களில் ஏறுவதற்கு முன்னரே உணவுகள் பயணிகளின் இருக்கைகளில் வைக்கப்படும். அதே நேரத்தில் தங்கள் சொந்த உணவை எடுத்துச் செல்ல பயணிகளை விமான நிறுவனங்கள் ஊக்குவிக்கக்கூடும் எனத் தெரிகிறது.
மேலும், விமான போக்குவரத்துத் துறை இயக்குநரகம் வகுத்துள்ள நடைமுறைப்படி, விமானங்களில் சமூக விலகலை கடைபிடிக்க ஏதுவாக அனைத்து நடுத்தர இருக்கைகளையும், கடைசி மூன்று வரிசைகளையும் காலியாக வைத்திருப்பது கட்டாயமாக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அதன்மூலம் நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோவின் 186 இருக்கைகள் கொண்ட ஏர்பஸ் ஏ 320 ஜெட் விமானத்தில், 106 இருக்கைகளில் மட்டுமே பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படும் எனத் தெரிகிறது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “திறந்தவெளிகளில் சமூக விலகலை கடைபிடிப்பது எளிது. ஆனால் விமானம் போன்ற ஒரு வரையறுக்கப்பட்ட இடங்களில், எத்தனை பேரை அனுமதிக்க வேண்டும் என்பது குறித்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.
விமானத்தின் உள்ளே சமூக விலகலை உறுதி செய்வதற்கு நடுத்தர இருக்கையை காலியாக வைத்திருப்பது முக்கியம். என்றாலும், பயணிகளுக்கு அறிகுறிகள் தென்பட்டால் தனிமைப்படுத்த கடைசி மூன்று வரிசைகள் காலியாக வைக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “வைரஸ் கட்டுப்படுத்தப்படும்வரை அனைத்து பயணிகளுக்கும் வெப்ப பரிசோதனை இருக்கும். பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு விமான நிலையங்களுக்கு அறிவுறுத்தப்படும்” எனக் குறிப்பிட்டார்.
இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் காரணமாக விமான நிறுவனங்கள் கட்டணங்களை கணிசமாக உயர்த்தக்கூடும் என்றும் தொழில்துறை நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

 “டெல்லி முதல் மும்பை வரை 180 சீட்டுகள் இருந்தால் குறைந்தபட்சம் ரூ 5,000 டிக்கெட் வசூலிக்க முடியும். ஆனால் 80 இடங்களைக் குறைப்பதன் மூலம் குறைந்தபட்ச கட்டணம் ரூ 10,000 ஆக இருக்க வேண்டும். இதுபோன்ற காலங்களில், விமானத்தில் செல்ல யார் அதை செலுத்துவார்கள்?” என அதிகாரி கேள்வி எழுப்புகிறார்.