மகிழ்ச்சி கனவுகளை நொடியில் சிதைத்து, அழியாத சோகப் பக்கங்களாக மாறியுள்ளது ஓர் இளம்ஜோடியின் வாழ்க்கை.. லண்டனில் படித்து வந்த விபூதிபென் படேல் குஜராத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பிசியோதெரபி பட்டம் பெற்றவர். பின்னர் லெய்செஸ்டர் கல்லூரியில் முதுகலைப் படிப்பதற்காக இங்கிலாந்து சென்றார். அங்கு ஹர்திக் அமையாவுடன் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் வாழ்க்கையில் ஒன்றாகச் சேர முடிவு செய்த நிலையில், கடந்த வாரம் குஜராத்திற்குத் திரும்பி நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளனர்.
10 நாட்கள் விடுப்பில் சொந்த ஊர் வந்த இந்த இளம் ஜோடி, தங்கள் திருமணம் குறித்த கனவுகளுடன் மீண்டும் இங்கிலாந்து திரும்புவதற்காக விமானத்தில் ஏறியுள்ளனர். ஆனால், அத்துடன் அவர்களின் கல்யாண கனவுகள் அனைத்தும் கருகின.. கோர விபத்தில் விபூதி மற்றும் ஹர்திக் இருவரும் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் அவர்கள் குடும்பத்தை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் மலர்ந்த இந்த காதல் கதை, இரண்டு குடும்பங்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றிருந்த நிலையில், எதிர்பாராத விபத்தால் அரும்பிலேயே கருகிப் போனது, அனைவர் மனதையும் கலங்க வைத்துள்ளது.