பொதுவாக, குழந்தைகள் பொக்கை வாயுடன்தான் பிறக்கும். ஆறு அல்லது ஒரு வருடத்துக்குப் பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக பற்கள் வளரும். சில அதிசய குழந்தைகள் இதற்கு மாறாகவும் பிறந்து வியப்பை ஏற்படுத்தும். அப்படியொரு குழந்தை பெங்களூரில் பிறந்திருக்கிறது.
பெங்களூரில் உள்ள ஹெச்ஆர்பிஆர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரதீப் குமார். இவர் மனைவி மது சந்திரிகா. இவர்களுக்கு கடந்த மாதம் 3 ஆம் தேதி அழகான பெண்குழந்தை பிறந்தது. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்தனர்.
மறுநாள் சந்திரிகா, குழந்தையை தற்செயலாகப் பார்த்திருக்கிறார். அப்போதுதான் குழந்தைக்கு 2 பற்கள் முளைத்திருப்பது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தார். அதெப்படி, பற்களுடன் குழந்தை பிறந்தது என்று ஆச்சரியம். பின்னர் இதுபற்றி மருத்துவர்களிடம் தெரிவித்தனர். அதை அறுவை சிகிச்சை செய்து நீக்கி விடலாம். குழந்தைக்கு ஒரு மாதம் ஆகட்டும் என்று கூறினர்.
இந்நிலையில் அந்த பற்கள் ஆடிக்கொண்டிருந்தன. இதனால் அந்த பற்கள் தன்னால் விழுந்து, அதை குழந்தை விழுங்கிவிடுமோ என்று சந்திரிகாவும் அவர் குடும்பத்தினரும் பயந்துகொண்டிருந்தனர். அப்படி ஏதும் நடக்கவில்லை. இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி அந்த பற்களை மருத்துவர்கள் ஆபரேஷன் மூலம் நீக்கியுள்ளனர்.
இதுபற்றி அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் நீது புன்ஹானி கூறும்போது, ‘’அது சாதாரண பல்தான். ஆடிக்கொண்டிருந்ததாலும் குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது அம்மாவுக்கு தொந்தரவாக இருக்கும் என்பதாலும் நீக்கினோம்’’ என்றார்