இந்தியா

ஒமைக்ரானுக்கு மத்தியில் டெல்லி, மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலம்

JustinDurai

ஒமைக்ரான் அச்சுறுத்தல் இருந்த போதும் நாடெங்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் விமரிசையாக நடைபெற்றது.

புத்தாண்டை ஒட்டி தலைநகர் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டடம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மும்பையில் உள்ள சிஎஸ்டி ரயில் நிலையமும் வண்ண விளக்குகளால் ஜொலித்தது. சுற்றுலா சொர்க்கமான கோவாவில் கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு புதிய ஆண்டை ஆடல் பாடலுடன் வரவேற்றனர். அப்போது வாணவேடிக்கைகளும் நிகழ்த்தப்பட்டன. மும்பையில் உள்ள பந்த்ரா - ஒர்லி கடல் பாலத்தின் மீது நடைபெற்ற லேசர் வர்ண ஒளி ஜாலங்கள் காண்போரை கவர்ந்திருந்தன.

பஞ்சாப்பின் அமிர்தசரசில் உள்ள பொற்கோயில் கண்கவரும் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏராளமான மக்கள் வழிபாடுகளுடன் புத்தாண்டை வரவேற்றனர். ராஜஸ்தானின் குல்மொகரில் நள்ளிரவில் ஆடல் பாடலுடன் புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியுடன் தொடங்கினர். குஜராத்திலும் காஷ்மீரிலும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தங்கள் முகாம்களில் புத்தாண்டை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

ஒமைக்ரான் தொற்றை கருத்தில் கொண்டு பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்ததால் பொதுஇடங்களில் கொண்டாட்டங்கள் அனுமதிக்கப்படவில்லை. குறிப்பாக டெல்லியில் கட்டுப்பாடுகள் முறையாக கடைபிடிக்கப்படுவதை உறுதிப்படுத்த ஆயிரக்கணக்கான காவல் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.