நில மாஃபியாவை "புதைப்பேன்" என்ற அச்சுறுத்தல் முதல் கட்டாய மத மாற்றங்களை சட்ட விரோதமாக்குவது வரை, மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தனது நான்காவது பதவிக் காலத்தில் ஆளுமை மற்றும் நிர்வாக தொனியில் புதிய ஆக்ரோஷ ஸ்டைலை பின்பற்றத் தொடங்கியுள்ளார் என்பது கண்கூடாக தெரிகிறது. அவர் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி அரசியலைப் பார்ப்போம்.
சிவ்ராஜ் சிங் சவுகான்... மூன்று முறை மத்தியப் பிரதேச முதல்வர் பதவியை அலங்கரித்தவர். எப்போதும் மென்மையாகப் பேசக்கூடிய தலைவர். அமைதியாகவே எந்தக் காரியங்களையும் செய்யக்கூடிய நபரும் கூட.
ஆனால், நான்காம் முறையாக முதல்வராக பதவியேற்றத்தில் இருந்தே அதிரடியாக பேசுவது, செய்வது என சுழன்று வருகிறார். இதற்கு ஓர் உதாரணம், டிசம்பர் 26 அன்று ஹோஷங்காபாத் மாவட்டத்தில் பாபாயில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் நில மாஃபியாக்களை எச்சரித்த விதம். அந்தக் கூட்டத்தில், ``என் வார்த்தைகளைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். நில மாஃபியா செய்பவர்கள் மத்தியப் பிரதேசத்தை விட்டு வெளியேறிவிடுங்கள். இல்லையேல், நான் உங்களை 10 அடிக்கு கீழ் புதைப்பேன்" என்றார் ஆக்ரோஷமாக.
இதேநாளில் இன்னொரு அதிரடியையும் செய்தார் சவுகான். யோகி ஆதித்யநாத்தின் உத்தரப் பிரதேச அரசு கொண்டுவந்த லவ் ஜிஹாத்தைத் தடுக்கும் ஜாமீனில் விடுவிக்க முடியாத குற்றமாக மாற்றும் சட்டத்துக்கு மத்தியப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதே வாரத்தில், அயோத்தியில் கட்டுமானத்தில் உள்ள ராமர் கோயிலுக்கான நன்கொடை தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிகளில் உஜ்ஜைன், இந்தூர் மற்றும் மன்ட்சூர் மாவட்டங்களில் இருந்து வன்முறை வெடித்தது. விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) மற்றும் பஜ்ரங் தளம் போன்ற பல இந்து வலதுசாரி அமைப்புகள் பேரணிகளின்போது கல்வீச்சை எதிர்கொண்டதாக புகார் கூறின.
இந்தப் புகாரை கேள்விப்பட்ட அடுத்த நொடி கொதித்தெழுந்த சவுகான், உத்தரப் பிரதேசம் போல கல்வீச்சு போன்ற வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மற்றும் ஒரு சட்டம் தேவை அது கொண்டுவரப்படும் கூறினார்.
ஏன் இந்த திடீர் ஆக்ரோஷம்!
சவுகான் திடீர் அதிரடிக்கான காரணங்களை பாஜக வட்டாரத்தினர் அடுக்கிறார்கள். பெயர் கூற விரும்பாத, பாஜக மூத்த தலைவர் ஒருவர், ``சவுகானின் ஒவ்வொரு செயலிலும் அவரின் அதிரடி தெரிகிறது. இதற்குமுன் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோதும், சவுகான் இப்படி நடந்துகொள்ளவில்லை. ஆனால், பாஜகவை காங்கிரஸ் வென்ற பிறகு அவரின் தொனி மாறியது. இன்று முதல்வர் பதவியில் சவுகான் இருக்கிறார் என்றால், அது சிந்தியாவால் நடந்தது என்பது அவருக்குத் தெரியும். இதுதான் அவரது நடத்தையை பாதிக்கிறது; அவர் அதிலிருந்து ஓட முடியாது" என்றுள்ளார்.
இதேபோல், அரசியல் விஞ்ஞானியும் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் சகருமான ராகுல் வர்மா, சவுகானின் மாறுபட்ட நடத்தைக்கு மூன்று காரணங்கள் இருப்பதாக 'தி பிரின்ட்'-டிடம் விளக்குகிறார். ``சிவ்ராஜ் சவுகான் முந்தையை ஆட்சிக் காலத்தில் அனுபவித்த பதவி சுகத்தை இப்போது அனுபவிக்க முடியவில்லை. பெரும்பான்மை காரணங்களால் ஆட்சியில் அமைதியின்மை மற்றும் பாதுகாப்பின்மை உணர்வு இருப்பதாக அவர் நினைக்கிறார்.
மேலும், சிந்தியா மற்றும் கைலாஷ் விஜயவர்கியா ஆகியோரும் முதல்வர் பதவிக்கு பரிசீலிக்கப்படுகிறார்கள் என்ற வதந்தி அவரை மேலும் குழப்பமடைய வைக்கிறது. எனவே, மூன்று முறை முதல்வராகவும், பிரபலமான தலைவராகவும் இருந்தபோதிலும், சவுகான் இப்போது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் மையத்தை மகிழ்விக்க ஹார்ட்கோர் இந்துத்துவ நிலைப்பாட்டைக் காட்ட முயற்சிக்கிறார். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் முக்கிய தலைவர்களை மகிழ்வித்தால் முதல்வர் பதவி நிலைக்கும் என்று அவர் நம்புகிறார்.
அவருக்கு இன்னொரு கவலையும் இருக்கிறது. யோகி ஆதித்யநாத்தின் புகழ் கட்சிக்குள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நரேந்திர மோடியின் பெயர் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் ஒரு காலத்தில் பிரதமராக தகுதி இருக்கும் நபர்களில் சவுகானின் பெயர் இருந்தது. அப்படி இருந்த சவுகான் இப்போது தனது முதல்வர் நாற்காலி கூட பாதுகாப்பாக இல்லாத சூழ்நிலையில் இருக்கிறார். ஆனால் இன்று அவர் இடத்தில் யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார். எனவேதான், மோடிக்கு பிந்தைய காலத்தில் பிரதமர் பந்தயத்தில் தன் பெயரும் பரிசீலிக்கப்பட வேண்டும் என்ற விருப்பத்தால் அவரது நடத்தையில் ஏற்பட்ட மாற்றம் தூண்டப்பட்டிருக்கலாம் என்று சிலர் நம்புகிறார்கள்.
இருப்பினும், மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், அரசியல்வாதிகள் பெரும்பாலும் சாதாரண மனிதர்களைப் போலவே நடந்துகொள்வார்கள். அவர்கள் மகிழ்ச்சியற்ற நிலையில் இருக்கும்போது அவர்கள் வெறுக்கப்படுகிறார்கள். இதற்கு உதாரணமாக தனது ஆளுகை இருந்தபோதிலும், 2018-ல் வாக்காளர்கள் அவருக்கு பெரும்பான்மை அளிக்கவில்லை என்று சவுகான் கருதுகிறார்" என்று கூறி இருக்கிறார் ராகுல் வர்மா.
மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
சவுகானின் இந்த திடீர் அதிரடிகள் குறித்து சமீபத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட உஜ்ஜைன், இந்தூர் மக்களிடம் 'தி பிரின்ட்' ஆய்வு நடத்தியுள்ளது. ஆய்வில் கருத்து தெரிவித்த பெயர் குறிப்பிட விரும்பாத உஜ்ஜைனைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் மதத் தலைவர் ஒருவர், ``சிவ்ராஜ் சிங் சவுகானைப் பொருத்தவரை, அவர் எப்போதும் வாஜ்பாயைப் போலவே இருந்தார். மென்மையான மனிதர் மற்றும் மரியாதைக்குரியவர். ஆனால் எங்களால் அவரை இனி அடையாளம் காண முடியாதது போல் இருக்கிறது.
மொழி, சைகைகள் மற்றும் அவரது கொள்கைகள் கூட பெரும்பான்மை மக்களை திருப்திப்படுத்த வடிவமைக்கப்பட்டதாக தெரிகிறது. ஒரு விஷயத்தை நிரூபிக்க அவர் சில அழுத்தங்களுக்கு உள்ளாகத் தெரிகிறது" என்று கூறியுள்ளார்.
இதேபோல், இந்தூரை சேர்ந்த ஒரு நபர், ``சவுகான் மத்தியப் பிரதேசத்தை பாதுகாப்பாக ஆக்குவது பற்றி பேசுகிறார். அவர் நில மாஃபியா மீது நடவடிக்கை எடுத்து வருகிறார். 'லவ் ஜிஹாத்'தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுப்பதில்கூட அவர் தயங்கவில்லை. சில நேரங்களில், கோபப்படுவதும் நல்லது" என்று கூறியுள்ளார்.
- மலையரசு
தகவல் உறுதுணை: The Print