மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை விதித்த இடைக்காலத் தடை ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை விதிக்கும் மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு தடை விதிக்கக் கோரி கேரள இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி சுனில் என்பவர் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். இந்த மனு தலைமை நீதிபதி, நவ்நீத் பிரசாத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மத்திய அரசின் இந்த உத்தரவில் மாடுகளை இறைச்சிக்காக கொல்வதற்கோ அல்லது இறைச்சி உணவை உட்கொள்வதற்கோ எந்தவிதமான தடையும் விதிக்கவில்லை. மாறாக, இறைச்சிக்காக மாடுகளை அதிகளவில் விற்பதற்கு மட்டுமே இந்த புதிய அறிவிப்பாணை மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அறிவிப்பாணைக்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்திருப்பதை சுட்டிக்காட்டினார். இந்த தடை உத்தரவு ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதாக நீதிபதி குறிப்பிட்டார். இதையடுத்து, மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட, அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.