செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்
சபரிமலையில் மண்டல பூஜையின் முன்னோடியாக திருவிதாங்கூர் மகாராஜா ஐயப்பனுக்கு வழங்கிய 451 பவுன் தங்க அங்கி ஊர்வலம் டிசம்பர் 22ஆம் தேதி பத்தனம்திட்டா ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்நிலையில், தங்க அங்கி ஊர்வலம் டிசம்பர் 25ம் தேதியான இன்று மதியம் 01.30 மணிக்கு பம்பை வந்தடையும். இதையடுத்து பல்லக்கிலிருந்து இறக்கப்படும் தங்க அங்கி, இன்று மாலை 3 மணிக்கு பம்பையில் இருந்து தலைசுமையாக சன்னிதானம் எடுத்துச் செல்லப்படும்.
தங்க அங்கி சபரிமலை புறப்படுவதை முன்னிட்டு இன்று (25.12.24) காலை 11.00 மணிக்கு மேல், பம்பையிலிருந்து பக்தர்கள் மலையேற அனுமதியில்லை. பம்பையில் இருந்து இன்று மாலை 3 மணிக்கு சன்னிதானம் நோக்கி புறப்படும் தங்க அங்கி, மாலை 5 மணிக்கு சரங்குத்தியை அடையும். தங்க அங்கி சரங்குத்தியை அடைந்த பின், இன்று மாலை 5 மணிக்கு மேல் தான், பக்தர்கள் பம்பையில் இருந்து சபரிமலை ஏற அனுமதிக்கப்படுவர். அதேபோல், சபரிமலை நடை வழக்கமாக அதிகாலை மூன்று மணிக்கு திறக்கப்பட்டு மதியம் ஒரு மணிக்கு அடைக்கப்படும்.
இதைத் தொடர்ந்து மீண்டும் மாலை 3 மணிக்கு திறக்கப்படும் நடை, இரவு 11 மணிக்கு அடைக்கப்படும். ஆனால், ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து மகா தீபாராதனை நடப்பதை முன்னிட்டும், இன்று (25.12.24) மதியம் பூஜை முடிந்து, மதியம் 1 ஒரு மணிக்கு அடைக்கப்படும் நடை, மீண்டும் மாலை 3 மணிக்கு பதில் 5 மணிக்கு திறக்கப்படும். 5 மணிக்கு நடை திறக்கப்பட்டாலும், தங்க அங்கி சார்த்திய ஐயப்பனுக்கு மாலை 6.40 மணிக்கு நடக்கும் மகா தீபாராதனைக்கு பின்னரே, பக்தர்கள் 18ம் படி ஏறவும் தரிசனம் செய்யவும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
சபரிமலைக்கு வரும் அனைவருக்கும் தங்க அங்கியில் ஜொலித்தவாறு வீற்றிருக்கும் ஐயப்பனை தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் தரிசனம் சுமூகமாக நடைபெற நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் போலீசார் ஒருங்கிணைந்து செயல்படுவர். புதிதாக செய்யப்பட்டுள்ள மாற்றங்களை நடைமுறைப்படுத்தும் போலீசாருக்கு பக்தர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.