இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலை குறித்த புதிய அறிக்கை வெளியாகியுள்ளது. ’Rethinking Affirmative Action for Muslims in Contemporary India’ என்ற தலைப்பிலான அந்த அறிக்கை இந்தியாவில் இதுவரை செயல்படுத்தப்பட்டுள்ள இஸ்லாமியர்களுக்கான திட்டங்கள், அவர்களின் பிற்பட்ட நிலையைப் போக்குவதற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றின் விளைவுகளை விவரிக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் இஸ்லாமியர்களின் பிற்பட்ட நிலையைப் போக்குவதற்கான பரிந்துரைகளை வழங்க சில குழுக்கள் நியமிக்கப்பட்டன.
2006இல் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் சிறுபான்மையினருக்கான திட்டங்கள்,கொள்கைகளை உள்ளடக்கிய 15 அம்ச பெருந்திட்டத்தை முன்வைத்தார். மத்திய சிறுபான்மை நலத்துறை என்ற புதிய அமைச்சகம் உருவாக்கப்பட்டது. சிறுபான்மையினர் முன்னேற்றத்துக்கான பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
2014இல் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற முழக்கத்துடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற மோடி தலைமையிலான பாஜக அரசில், இஸ்லாமியர்களின் பிற்பட்ட நிலையை அகற்றுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இந்த அறிக்கை இஸ்லாமியர்களின் கல்வி, வேலைவாய்ப்பு நிலைகளை விளக்குகிறது. இந்தியாவில் பள்ளிக் கல்வியை நிறைவுசெய்தவர்களில், உயர்கல்விக்குச் செல்பவர்கள் எண்ணிக்கையில் இஸ்லாமிய குழந்தைகள் மிகவும் பின்தங்கியுள்ளனர்.
ஆனால் அண்மைய ஆண்டுகளில் இஸ்லாமிய மாணவர்கள் உயர்கல்வி நிலையங்களில் சேர்வது அதிகரித்துள்ளது. அதேசமயம், தொழில்நுட்பம்,மேலாண்மை, மருத்துவம், பொறியியல் போன்ற தொழில்முறை சார்ந்த பட்டப்படிப்புகளை இஸ்லாமியர்கள் அரிதாகவே தேர்வு செய்யும் சூழல் நிலவுகிறது. தனியார் பள்ளிகளில் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெறுவதில் இஸ்லாமியர்களின் நிலை, பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடிகளை விட சற்று மேம்பட்ட நிலையில் உள்ளது. சொத்துடைமையில் பெருவாரியான இஸ்லாமியர்கள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். நிலையான ஊதியம் அளிக்கும் வேலைவாய்ப்புகளை இஸ்லாமியர்கள் பெறுவது அதிகரித்துள்ளது.
அதே நேரம் மூளை உழைப்பு மட்டுமே தேவைப்படும் வேலைகளைப் பெறுவதில் இந்து மதத்தின் முற்பட்ட வகுப்பினருடன் ஒப்பிடுகையில் இஸ்லாமியர்கள் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர். இந்த நிலையை சரி செய்து இந்திய இஸ்லாமியர்கள் நிலையை மேம்படுத்த, இந்த அறிக்கையை வெளியிட்டவர்கள் ஏழு பரிந்துரைகளை முன்வைக்கின்றனர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் இஸ்லாமியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்கும் நடைமுறை கைவிடப்பட வேண்டும். மாறாக, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு அனைத்து மதங்களிலும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ளவர்களை உள்ளடக்கியதாக மாற்றப்பட வேண்டும்.
பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீடு தலித் இஸ்லாமியர்கள் மற்றும் தலித் கிறிஸ்தவர்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். இட ஒதுக்கீட்டுக்கான 50 சதவீத உச்ச வரம்பு மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் பட்டியலில் மேலும் சில சமூகங்களை இணைக்க இடம் அளிக்கப்பட வேண்டும். மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள 112 மாவட்டங்களை மேம்படுத்துவதற்கான நிதி ஆயோகின் திட்டத்தில் சிறுபான்மையினர் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் மாவட்டங்கள் இணைக்கப்பட வேண்டும். இஸ்லாமியர்கள் அதிக எண்ணிக்கையில் ஈடுபடும் வேலைகளில் உள்ள பிரச்னைகளைக் களைவதற்கான கொள்கை வகுக்கப்பட வேண்டும். இஸ்லாமியர் நிலையை மேம்படுத்துவதற்கான விவாதங்களில் தனியார் துறையினரை இணைத்துக்கொள்ள வேண்டும்.
இஸ்லாமிய சமூக நல அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் ஆகியவற்றை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். டெல்லியில் உள்ள Centre for the Study of Developing Societies-ஐச் சேர்ந்த அஹ்மத் மற்றும் ஆலம், Policy Perspectives Foundationஐச் சேர்ந்த பர்வீண் ஆகியோர் இந்த அறிக்கையை எழுதியுள்ளனர். அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் உள்ள இந்தோ-அமெரிக்க கொள்கை மையத்தின் முன்னெடுப்பான இந்த அறிக்கை, ஹைதராபாத்தில் உள்ள Centre for Development Policy and Practice என்ற அமைப்பால் வெளியிடப்பட்டுள்ளது.