டெல்லி முதல்வர் ரேகா குப்தா பொது நிகழ்வில் நபர் ஒருவரால் தாக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, டெல்லி காவல் ஆணையர் மாற்றப்பட்டுள்ளார். இதுகுறித்த செய்தித் தொகுப்பை இங்கு அறியலாம்.
டெல்லியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது. முதல்வராக ரேகா குப்தா உள்ளார். இந்த நிலையில், டெல்லியின் சிவில் லைன்ஸில் உள்ள அவரது வீட்டில், மக்களின் குறைகளை கேட்கும் ‘ஜன் சன்வாய்’ நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பொதுமக்களிடமிருந்து அவர் மனுக்களைப் பெற்றிருந்தார். அந்தச் சமயத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முதல்வர் ரேகா குப்தாவின் தலைமுடியைப் பிடித்து இழுத்து கன்னத்தில் கடுமையாகத் தாக்கினார்.
எனினும், முதலமைச்சரைத் தாக்கிய உடனேயே அவரது பாதுகாப்புப் பிரிவினர் அந்த நபரைப் பிடித்தனர், மேலும் தாக்குதலுக்கு என்ன காரணம் என்று டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த முதல்வர் ரேகா குப்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதேநேரத்தில், இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் பாதுகாப்பு கருதி டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
முதல்வரின் தாக்குதலுக்குப் பிறகு, டெல்லி காவல் ஆணையராக இருந்த எஸ்.பி.கே. சிங் தற்போது மாற்றப்பட்டுள்ளார். தற்போது அவருக்குப் பதிலாக மூத்த இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) அதிகாரி சதீஷ் கோல்ச்சா நியமிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தகுதிவாய்ந்த அதிகாரியின் ஒப்புதலுடன், தற்போது டெல்லியின் டைரக்டர் ஜெனரலாக (சிறைச்சாலைகள்) பதவி வகிக்கும் திரு. சதீஷ் கோல்ச்சா, ஐபிஎஸ் (AGMUT:1992), பொறுப்பேற்ற தேதியிலிருந்து மறு உத்தரவு வரும் வரை டெல்லி காவல்துறை ஆணையர் பதவிக்கு இதன்மூலம் நியமிக்கப்படுகிறார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
1992ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியான கோல்ச்சா, AGMUT கேடரைச் சேர்ந்தவர். டெல்லி காவல் துறையில் துணை காவல் ஆணையர், இணை காவல் ஆணையர் மற்றும் சிறப்பு காவல் ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் உளவுத்துறை) உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார். 2020ஆம் ஆண்டு வடகிழக்கு டெல்லி கலவரத்தின்போது சிறப்பு காவல் ஆணையராக இருந்த அவர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிறைச்சாலை இயக்குநர் ஜெனரலாக (சிறைச்சாலைகள்) நியமிக்கப்பட்டார்.