சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்தாண்டு மண்டல பூஜையின்போது சாமி தரிசனம் செய்வதற்கான இணைய வழி முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
எனவே, இந்தாண்டு நவம்பர் 17-ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 19-ஆம் தேதி வரை சாமி தரிசனம் செய்ய விரும்புவோர் sabarimalaonline.org என்ற இணையதளத்திற்குச் சென்று சாமி தரிசனத்துக்கான முன்பதிவை செய்துகொள்ளலாம். இந்தாண்டு உண்டியல் உள்ளிட்ட பல்வேறு காணிக்கைகளை இணையதளத்தில் செலுத்தும் வகையில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சபரிமலை சாமி ஐயப்பன் கோயிலில் நிகழாண்டுக்கான மண்டல பூஜை நவம்பர் 16-ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி நவம்பர் 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு டிசம்பர் 27-ஆம் தேதி மூடப்படும். அதைத்தொடர்ந்து மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் திறக்கப்படும். பின்பு டிசம்பர் 31-ஆம் தேதி மாலை திறக்கப்பட்டு ஜனவரி 19-ஆம் தேதி வரை மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டிருக்கும்.
மண்டல, மகரவிளக்கு பூஜை மாதங்களில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சபரிமலையில் குவியத் தொடங்குவார்கள்.
சில சமயங்களில் பக்தர்களின் வருகை மிக அதிகமாக இருக்கும். இதனால் பெரும்பாலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலையும் ஏற்படுகிறது. இதைத் தவிர்ப்பதற்காக கேரள காவல்துறை சார்பில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் தரிசனத்துக்காக இலவசமாக இணையதளத்தில் முன்பதிவு செய்யும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.
பக்தர்கள் கவனிக்க !
இணையதள தரிசன முன்பதிவு செய்த பக்தர்கள், கூப்பனில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்துக்கு சரியாகவோ அல்லது 15 நிமிடம் முன்போ, பின்போ சென்றால் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். 1 மணி நேரத்துக்கும் முன்பாகவோ அல்லது பின்பாகவோ சென்றால் பொது தரிசனத்தில்தான் செல்ல வேண்டும்.
இந்தாண்டு மண்டல பூஜைக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருள்களை கொண்டு வரவேண்டாம் என்ற கேரள மாநிலக் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. சபரிமலை கோயில் அடர்வனப் பகுதியாகும், மேலும் பெரியார் புலிகள் சரணாலயத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக்கை தவிர்க்க பக்தர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.