புதிய மோட்டார் வாகன சட்டத்திருந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.
இந்தியாவில் நாள்தோறும் பலர் விபத்துக்களில் உயிரிழக்கின்றனர். இதனால் வாகன சட்டங்களை கடுமையாக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி, புதிய வாகன சட்டத்திருந்த மசோதாவை கொண்டுவந்தது. இந்த மசோதா மக்களவையை தொடர்ந்து, தற்போது மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பப்படும். குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்ற பின்னர் அது சட்டமாகும்.
மசோதா தாக்கலின் போது பேசிய மத்திய போக்குவரத்து மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதிகட்கரி, இந்தியாவில் தற்போது ஆண்டுதோறும் 5 லட்சம் விபத்துக்கள் ஏற்படுவதாகவும், அதில் 1.5 லட்சம் பேர் இருப்பதாகவும் தெரிவித்தார். உலக அளவில் அதிக விபத்துகள் நடைபெறும் நாடுகளில் இந்தியா முதலாவது இடத்தில் உள்ளது எனவும், தற்போது அந்த தவறுகளை சரிசெய்ய நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் கூறினார்.
இந்த சட்டத்தின்படி, வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறும்போது அதற்கான தண்டனையாக இனி ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம், 3 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட உள்ளது. வாகன ஓட்டிகள் இழைக்கும் சிறிய தவறுகளுக்கான அபராதம் 100 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. உரிமம் இன்றி ஓட்டுபவர்களுக்கு அபராதம் 500 ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. உரிய தகுதியின்றி வாகனம் ஓட்டினால் விதிக்கப்படும் அபராதம் 500 ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.
வாகனத்தை ஆபத்தான வகையில் ஓட்டினால் தற்போது 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில், அது 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் தற்போது கட்ட வேண்டியுள்ள நிலையில் அது இனி 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. சீட் பெல்ட் அணியாமல் பயணிக்கும் போது அபராதம் 100 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கிறது. 2 சக்கர வாகனங்களில் அதிக சுமை ஏற்றிச் சென்றால் தற்போது 100 ரூபாய் மட்டுமே அபராதமாக உள்ளது. ஆனால் அது 2 ஆயிரம் ரூபாயாக உயர்வதுடன் 3 மாதங்களுக்கு உரிமம் ரத்தும் செய்யப்படும்.
சிறார் வாகனம் ஓட்டும் போது அவ்வாகனத்தின் உரிமையாளர் அல்லது பாதுகாவலருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் என்பதுடன் 3 ஆண்டு சிறைவாசமும் அனுபவிக்க வேண்டியிருக்கும். இது வாகனத்தை ஓட்டிய சிறுவன் மீது சிறார் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.