இந்தியா

விசா விவகாரம் : புதிய மாலத்தீவு அதிபர் இந்திய வருகை

webteam

மாலத்தீவுகளின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முகமது சாலிக் நாளை இந்திய வருகிறார்.

மாலத்தீவுகளில் பல்வேறு பிரச்னைகளுக்குப் பிறகு புதிய அதிபராக முகமது சாலிக் கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த நவம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற இவரது பதவியேற்பு விழாவில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அங்கு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு தரப்பட்டது. இந்நிலையில் சரியாக ஒரு மாதம் கழித்து மலத்தீவுகள் அதிபர் இந்தியா வருகை தருகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க டெல்லி ராஜ்பவனில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாளை மதியம் 2 மணிக்கு வருகை தரும் சாலிக் 3 நாட்கள் இந்தியாவில் தங்கவுள்ளார். இதில் நாளை இந்திய வியாபாரத் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் பிரதமர் மோடியுடன் இணைந்து டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்திக்கிறார். இதைத்தொடர்ந்து ஆக்ராவிற்கு அவர் பயணம் செய்யவுள்ளார். 

மாலிக்கின் வருகை தொடர்பாக கூறியுள்ள மாலத்தீவுகளின் வெளியுறவுத்துறை அமைசர் அப்துல்லா ஷாகித், “இருநாடுகள் இடையேயான நட்புறவை மேம்படுத்த எங்கள் அதிபர் இந்தியா செல்கிறார். இந்தியாவுடான நீண்ட கால நட்பைத் தொடர எங்கள் அரசு விரும்புகிறது. அதுமட்டுமின்றி எங்கள் மாணவர்கள் இந்தியாவில் படிப்பதற்கான விசா கிடைப்பதில் சிக்கவுள்ளது. மேலும் எங்கள் மக்கள் சிகிச்சைக்காக இந்தியா செல்வதிலும் சில விசா பிரச்னைகள் உள்ளன. இவற்றை சரிசெய்ய எங்கள் அதிபர் இந்தியா செல்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.