மகாராஷ்டிராவில் சமீபத்தில், 288 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்றதில், பாஜக அங்கம் வகிக்கும் மஹாயுதி கூட்டணி அமோக வெற்றிபெற்றது. அந்தக் கூட்டணி, 235 தொகுதிகளைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் பாஜக, காபந்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியன உள்ளன. இதனால், பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சியமைக்க இருக்கிறது. என்றாலும், அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி தற்போதே தொடங்கிவிட்டது. குறிப்பாக, யார் முதல்வர் என்பதில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
சிவசேனா ஆதரவாளர்கள் மீண்டும் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வர் பதவி வகிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அதுபோல் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள், தேவேந்திர பட்னாவிஸே முதல்வராக வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதனால், அங்கு அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் டெல்லியில் பாஜக தலைமையைச் சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், ஏக்நாத் ஷிண்டே திடீரென தனது சொந்த கிராமத்திற்குச் சென்றுள்ளதால், இந்தக் கூட்டம் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டதில் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து இறுதி முடிவெடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, ”மகாராஷ்டிராவின் புதிய முதல்வரின் பதவியேற்பு விழா டிசம்பர் 5ஆம் தேதி மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெறும்” என அம்மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவான்குலே தெரிவித்துள்ளார். இவ்விழாவில், பிரதமர் மோடி கலந்துகொள்வார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ஷிர்சத், “நாளைக்குள் (டிச.1) ஏக்நாத் ஷிண்டே ஒரு முக்கிய முடிவை எடுப்பார்” எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “என்னைப் பொறுத்தவரை, ஏக்நாத் ஷிண்டே நினைக்கும்போதெல்லாம், அவர் தனது சொந்த கிராமத்திற்குச் செல்லலாம் என்று நினைக்கிறார். நாளை மாலைக்குள் அவர் ஒரு முக்கிய முடிவை எடுப்பார். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் அல்லது அரசியல் முடிவாகக்கூட இருக்கலாம். ஆனால், எல்லாம் நாளை சரியாகிவிடும். டிசம்பர் 2ஆம் தேதி மாலைக்குள், இதற்கான ஏற்பாடுகள் எங்களிடம் இருப்பதால் டிசம்பர் 5ஆம் தேதிக்கு முன்னதாக பதவியேற்பு விழாவை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.