புதிய வகை கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவி வரும் நிலையில் அதன் தன்மை என்ன என்பது குறித்தும் அதை எதிர்கொள்ள இந்தியாவில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் தற்போது பார்க்கலாம். சிங்கப்பூர், ஹாங்காங், சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் JN 1 எனப்படும் புதுவகை கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா தொற்று மெல்ல அதிகரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதைத்தொடர்ந்து மத்திய சுகாதார சேவைகள் துறை சார்பில் டெல்லியில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது . இதன் பின் பேசிய அதிகாரிகள் இந்தியாவில் மே 19 நிலவரப்படி 257 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் இது அஞ்சத்தக்க அளவு அல்ல என்றும் தெரிவித்தனர். மேலும் இந்த 257 பேருக்கு தொற்றின் தீவிரம் மிகக்குறைவாகவே இருப்பதாகவும் மருத்துவமனை அனுமதி தேவைப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும் நிலைமையை கவனமாக கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கேரளாவில் சுமார் 100 பேருக்கு கொரோனா தொற்று உள்ள நிலையில் ஒருவர் அதனால் இறந்துள்ளார். கேரளாவில் தற்போது காய்ச்சல், தலைவலியால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும் கவனம் பெறுகிறது. ஒமைக்ரான் வகை கொரோனா வைரசின் திரிபாக கருதப்படும் JN1 வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும் உடலின் இயல்பான நோய் எதிர்ப்புத்திறனை மீறி பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல், தொண்டை வலி, இருமல், உடல் வலி, நுகரும் திறன் பாதிப்பு போன்ற அறிகுறிகளே புது வகை கொரோனாவுக்கும் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும் பிற வகை ஒமிக்ரான் வைரஸ்களை விட இது தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் சிங்கப்பூரில் இத்தொற்று ஏற்பட்டவர்கள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விகிதமும் அதிகமாக இருக்கிறது. அதே நேரம் இந்த J1 வைரசை கவலை தரும் வைரஸ் என்ற பட்டியலில் வைக்காமல் விரிவாக ஆய்வு தேவைப்படும் வைரஸ் பட்டியலில் உலக சுகாதார அமைப்பு வைத்துள்ளது.