பிரபலங்கள் தவறான விளம்பரங்களில் நடித்தால் சிறை தண்டனை அளிக்கும் வகையில் புதிய சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவை பொருத்தவரையில் நடிகர், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் தான் பெரும்பாலும் விளம்பரங்களில் ஒப்பந்தமாகுகிறார்கள். பல விளம்பரங்கள் தவறாக வருவதால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். நுகர்வோர்களை பாதுகாக்க மத்திய அரசு முடிவு செய்து புதிய சட்டம் ஒன்றை கொண்டு வர திட்டமிட்டது.
இது தொடர்பாக ஆராய நாடாளுமன்றக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டது. தவறான விளம்பரங்களால் நுகர்வோர்கள் பாதிக்கப்படுவது குறித்து அந்தக் குழு ஆய்வு செய்து அறிக்கை கொடுத்தது. அதன்படி மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் நுகர்வோர் பாதுகாப்புக் குறித்த புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்தப் புதிய சட்டத்தின்படி தவறான விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு 3 ஆண்டு தடை விதிக்கப்படும். அதாவது தவறான விளம்பரங்களில் ஒப்பந்தம் ஆகி இருந்தால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர்கள் விளம்பரங்களில் ஈடுபடக்கூடாது. மேலும், ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்ற இந்தப் புதிய மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அதே நேரத்தில் தவறான விளம்பரங்களில் ஈடுபடும் பிரபலங்களுக்கு சிறை தண்டனை விதிக்க வேண்டும் என்ற நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.