இந்தியா

பீகாரில் புதிதாக பதவியேற்ற சட்ட அமைச்சருக்கு பிடிவாரண்ட் - நெருடலில் நிதிஷ் குமாா்!

JustinDurai

பீகாரில் புதிதாக பதவியேற்ற சட்ட அமைச்சருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது குறித்து கேள்விக்கு பதிலளித்த முதல்வர் நிதிஷ் குமார், அது பற்றி எதுவும் தனக்குத் தெரியாது என்றார்.

பீகார் மாநிலத்தில் பாஜக உடனான கூட்டணியை அண்மையில் முறித்த நிதிஷ் குமாா், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கைகோர்த்து கூட்டணி ஆட்சியை அமைத்தாா். இதையடுத்து,  முதல்வா் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை செவ்வாய்க்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டு, 31 அமைச்சா்கள் பதவியேற்றனா். இவா்களில் 16 போ் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை சோ்ந்தவா்களாவா். அமைச்சரவையில் இக்கட்சிக்குதான் அதிக இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதனிடையே, சட்டத்துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த கார்த்திகேய சிங் மீது ஏற்கெனவே கடத்தல் வழக்கு இருக்கும் சூழலில், ஆகஸ்ட் 16ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தின் முன்பாக சரணடைய வேண்டும் என  அவருக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. கடந்த 2014ல் கட்டட உரிமையாளர் ஒருவரை கொலை செய்ய அவரைக் கடத்திய சம்பவத்தில் கார்த்திகேய சிங் மற்றும் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  ஆனால், கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி விசாரணையில், வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி வரை அவரை கைது செய்ய இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வர் நிதிஷ் குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'அது பற்றி எதுவும் எனக்குத் தெரியாது' என்று பதில் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: நியமிக்கப்பட்ட சில மணிநேரங்களில் பதவியை ராஜினாமா செய்த குலாம் நபி ஆசாத்