புதிய மசோதா தாக்கல்
புதிய மசோதா தாக்கல் pt web
இந்தியா

பொதுத்தேர்வுகளில் முறைகேடு செய்தால் 10 வருட சிறை, ரூ.1 கோடி அபராதம்; புதிய மசோதா சொல்வதென்ன?

Angeshwar G, Jayashree A

பல்வேறு மாநிலங்களில் பொதுத் தேர்வில் தேர்வு வினாத்தாள் கசிவது போன்ற முறைக்கேடுகள் நடந்த வண்ணம் உள்ளன. இத்தகைய முறைகேடுகளை தடுப்பதற்கு ஏற்கனவே குஜராத் போன்ற மாநிலங்களில் தனி சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இத்தகைய சூழ்நிலையில் மத்திய அரசு ஒரு புதிய சட்டத்தை இயற்ற முடிவு செய்துள்ளது.

அதில் பொதுத் தேர்வுகளில் மோசடி செய்தால் பத்து வருடம் வரை சிறை தண்டனை மற்றும் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிப்பதற்குண்டான சட்டப்பிரிவுகளை அமல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார். மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஒப்புதலை பெற்ற பிறகு இந்த மசோதா அமலுக்கு வருவதற்கான வாய்ப்புள்ளது.

நல்ல நோக்கத்துடன் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இதனால் எந்த சிக்கலும் இல்லை என்றும் கூட்டாக சேர்ந்து தேர்வுகளில் மோசடி செய்பவர்களை தண்டிக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்படுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வுகள் மசோதாவின் கீழ் அரசு அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து தேர்வுத் தாள்களை கசியவிடுதல் அல்லது விடைத்தாள்களை சிதைப்பவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1 கோடி அபராதமும் விதிக்கப்படும். இந்த மசோதாவின் கீழ் உள்ள அனைத்து குற்றங்களும் ஜாமீனில் வெளிவர முடியாதவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே மத்திய பிரதேச மாநிலத்தில் வியாபம் மோசடி மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் நுழைவு தேர்வு மோசடிகள் நடைபெற்று பெரும் அதிர்ச்சிய தேசிய அளவில் ஏற்படுத்தியது. மேலும் பிகார், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் மோசடிகள் தொடர்ச்சியாக நடைபெறுவதாக புகார்கள் வந்துள்ளன. இதனால் சில சமயம் போராட்டங்கள் கூட நடைபெற்றன.

மக்களவை மற்றும் மாநில அவைகளில் ஒப்புதல் பெற்ற பிறகு குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு இந்த சட்டம் அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஒன்பதாம் தேதியோடு முடிவடைய உள்ளது. அதற்குள்ளாக ஒப்புதல் கிடைக்குமா என்பது சந்தேகம். ஆகவே மக்களவைத் தேர்தலுக்கு பிறகு இந்த புதிய மசோதா சட்டமாக மாறுவதற்குண்டான வாய்ப்பு அதிகமாக உள்ளது

இந்த சட்டத்தின் கீழ் சிவில் சர்வீஸ் நுழைவுத் தேர்வுகளுக்கு நடத்தப்படுகிற யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுகள், மத்திய அமைச்சகங்கள் மற்றும் துணை அலுவலகங்களில் உள்ள பதவிகளுக்கு நடத்தப்படுகிற பணியாளர் தேர்வாணைய தேர்வுகள், இந்திய ரயில்வேயில் சில வகையான வேலைகளுக்கு நடத்தப்படுகிற ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்களின் தேர்வுகள், State Bank of India தவிர அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் நடத்தப்படுகிற வங்கிப் பணியாளர் தேர்வுகள், உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி மூலம் நடத்தப்படுகிற நுழைவுத் தேர்வுகள் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதாவின் முதன்மை நோக்கமாக அதிக வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் நம்பகத்தன்மையை கொண்டு வருவதன் மூலம் பொதுத்தேர்வு முறையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதாகும். இளைஞர்களின் முயற்சிகள் அங்கீகரிக்கப்பட்டு அவர்களின் எதிர்காலம் பாதுகாப்பானதாக இருக்கும் என்று அவர்களுக்கு உறுது அளிப்பதே இதன் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வினாத்தாள் அல்லது விடைத்தாள், இதில் ஏதேனும் ஒரு பகுதியை கசியவிட்டாலோ, இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுடன் இணைந்து செயல்பட்டாலோ, அதிகாரம் இல்லாமல் வினாத்தாளை அணுகுதல், பொதுத்தேர்வில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்வெழுதுபவருக்கு உதவுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு இந்த சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும்.