இந்தியா

யூனிபார்மில் இருக்கும்போது தாக்குவார்கள் என நினைக்கவில்லை: வனத்துறை அதிகாரி கண்ணீர்!

webteam

யூனிபார்மில் இருக்கும்போது, என்னை தாக்குவார்கள் என்று நான் கற்பனை கூட செய்யவில்லை என்று தெலங்கானா வனத்துறை அதிகாரி அனிதா தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநில வனத்துறை அதிகாரி அனிதா. இவர் அங்குள்ள, சிர்பூர் மண்டல் பகுதியில் உள்ள சரசலா கிராமத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன் சென்றார். தெலங்கானா அரசின் மரம் நடும் திட்டத்தின் கீழ் அந்த கிராமத்தின் சில இடங்களில் மரம் நட சென்ற அவர், கிராமத்தில் உள்ள அரசு நிலங்களைத் தேர்வு செய்துள்ளார்.

இதற்கு கிராமத்தினர், எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். பின்னர் அவர்கள், எம்.எல்.ஏவின் சகோதரர் கோனரு கிருஷ்ணா ராவுக்கு அழைப்பு விடுத்தனர். தன் ஆதரவாளர்களுடன் வந்த அவர், வனத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய தை அடுத்து கையில் கிடைத்த கம்பால் வனத்துறை அதிகாரி அனிதாவை சரமாரியாகத் தாக்கினார். இதில் அவர் படுகாயமடைந்தார். பின்னர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 

அனிதா தாக்கப்பட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. வனத்துறை அதிகாரி தாக்கப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். பின்னர் அதிகாரியை தாக்கிய கோனரு கிருஷ்ணா கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனிதா, இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

இந்த தாக்குதல் குறித்து அவர் கூறும்போது, ‘’நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். யாருமே கல்வியறிவு பெற்றிராத குடும்பத்தில் இருந்து படித்து, முன்னேறி இருக்கிறேன். பெண் என்றும் பாராமல் என்னை இப்படி தாக்குவார்கள் என்று நான் நினைக்கவில்லை. யுனிபார்மில் இருக் கும்போது என்னை அடிப்பார்கள் என்றும் நினைத்ததில்லை’’ என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.