kavita kumari X
இந்தியா

சேலையில் வெறும் கால்களுடன்.. 1,600 மீட்டர் ஓடிய சிங்கப்பெண்.. நாடே திரும்பி பார்க்க வைத்த கதை..

வெறும் கால்களுடன் 1,600 மீட்டர் ஓட்டத்தை வெறும் 6 நிமிடங்களில் முடித்து சாதனை படைத்த பெண் ஒருவரின் வீடியோ, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

PT WEB

சோசோ கிராமத்தைச் சேர்ந்த கவிதா குமாரி, குடும்ப சுமைகளை தாங்கி, ஊர்காவல் படை தேர்வில் வெறும் கால்களுடன் புடவையுடன் 1,600 மீட்டர் ஓடி சாதனை படைத்தார். அவரது வீடியோ வைரலாகி, நெட்டிசன்கள் அவருக்கு அரசு பணி கிடைக்க வேண்டும் என ஆதரவு தெரிவிக்கின்றனர்.

செய்தியாளர் - கார்த்திகேயன்

ஜார்கண்ட் மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் உள்ள சோசோ கிராமத்தை சேர்ந்தவர் கவிதா குமாரி. இவரது கணவர் தீபக் மஹ்தோ கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். கணவர் இறந்த பிறகு, மாமியார், மாமனாரையும், தனது இரு குழந்தைகளையும் கவனித்துக் கொள்ளும் முழு பொறுப்பும், கவிதா குமாரிக்கு வந்து சேர்ந்துள்ளது. இதையடுத்து, 8-ஆம் வகுப்பு படிக்கும் தனது மகள் மற்றும் 7-ஆம் வகுப்பு படிக்கும் மகன் ஆகியோரின் படிப்பு செலவுக்காகவும், குடும்பத்தை நடத்துவதற்காகவும், செங்கல் சூளை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.

இவ்வாறு வாழ்க்கை மிகவும் சவாலாக இருந்த நேரத்தில் தான், ஊர்காவல் படைக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடத்தப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மொத்த பணியிடங்களில் 50 சதவீதத்தை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்வதோடு, கணவரை இழந்த மற்றும் விவாகாரத்தான பெண்களுக்கு 5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதாகவும், அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து அறிந்த கவிதா குமாரி, அந்த பணியை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். இதற்காக, காலை 4 மணிக்கே எழுந்து, வீட்டின் அருகில் உள்ள மைதானத்திற்கு சென்று பயிற்சி செய்து வந்துள்ளார்.

kavita kumari

இதற்கிடையே, இந்த பணிக்கான மாதிரி உடற்தகுதி தேர்வு நடந்தபோது, வெறும் காலுடனும், புடவை அணிந்தபடியும் கலந்துக் கொண்ட கவிதா குமாரி, ஆயிரத்து 600 மீட்டர் தூரத்தை வெறும் 6 நிமிடங்களிலேயே கடந்து பெரும் சாதனை படைத்துள்ளார். தனது குடும்பத்தின் நிலையை மாற்ற வேண்டும். எனவே, தோற்கவே கூடாது என்ற வெறியுடன் ஓடிய அந்த பெண்ணின் வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. மேலும், அந்த பெண்ணுக்கு நிச்சயமாக ஊர் காவல் படையில் நிச்சயம் பணி கிடைக்க வேண்டும் என்றும், நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், தற்போது நடந்து முடிந்திருப்பது மாதிரி உடற்தகுதி தேர்வு தான். விண்ணப்பத்தாரர்களுக்கு ஒரு பயிற்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக, இது நடத்தப்பட்டுள்ளது. உண்மையான உடற்தகுதி தேர்வு வரும் அக்டோபர் 24 முதல் நவம்பர் 05 வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றால் தான், அந்த பெண்ணுக்கு அரசு வேலை கிடைக்கும். எனவே, அந்த பெண்ணுக்கு நிச்சயம் பணி கிடைக்க வேண்டும் என்று, பலரது கமெண்ட்ஸ் பக்கத்தில் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த முறை உடற்தகுதி தேர்வில் பங்கேற்கும்போது, முறையான காலணிகளையும், ஆடைகளையும் அந்த பெண்ணுக்கு தனியார் தொண்டு நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.