இந்தியா

”லேட் நைட்டுல வெளிய போகாதீங்க?” -பாலியல் தொல்லை பற்றிய பெண்ணின் பதிவுக்கு சர்ச்சை கருத்து!

”லேட் நைட்டுல வெளிய போகாதீங்க?” -பாலியல் தொல்லை பற்றிய பெண்ணின் பதிவுக்கு சர்ச்சை கருத்து!

JananiGovindhan

இந்தியாவில் பெண்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது தொடர்ந்து கேள்விக் குறியாகி கிடக்கிறது. பாலியல் தொல்லைகள், வல்லுறவுகள், குடும்ப வன்முறைகள் என பல பரிமானங்களில் பெண்களும், பெண் குழந்தைகளும் பாதிக்கப்பட்டு வருவதோடு, இதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் அவர்கள்தான் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கும் ஆளாகுகிறார்கள்.

அந்த வகையில், தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பெண் ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்த பதிவுக்கு பயனர் ஒருவர் “இரவு நேரத்தில் வெளியே செல்லாமல் வீட்டில் இருங்கள்” என அறிவுறுத்தியுள்ளது நெட்டிசன்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ரீனா என்ற பெண் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “தெற்கு டெல்லியில் உள்ள அந்த கஃபே-க்கு செல்வதை நிறுத்திவிட்டேன். ஏனெனில் அங்கு இந்தியாவின் இரண்டு மதவெறியர்கள் என்னை இன ரீதியாக தொந்தரவு கடந்த மாதம் கொடுத்தார்கள். மேலும் நேற்று (ஆக.,10) பப்ளிக் பார்க்கில் ஒருவர் என்னை பின் தொடர்ந்து வந்து என்னிடம் தவறாக நடந்துக்கொள்ள முயன்றார். இதனால் பொது இடங்களுக்கு நான் அதாவது பெண்கள் செல்வதை நிறுத்த வேண்டுமா அல்லது வீட்டுக்குளேயே முடங்கிக் கிடக்க வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பியிருந்தார். 

ரீனாவின் இந்த பதிவுக்கு சனத் குமார் பால் என்பவர், “இரவு நேரங்களில் மற்றும் தெரியாத இடங்களுக்கு செல்வதை நீங்கள் நிறுத்திவிட்டு வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கலாம். இந்தியாவில் நீங்கள் மகிழ்ச்சியாக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சனத் குமாரின் இந்த அறிவுறுத்தல் பதிவை கண்ட பல நெட்டிசன்களும் அவரை சரமாரியாக வசைபாடியிருக்கிறார்கள். அதில், “தேவையில்லாத அட்வைஸ் இது” , “இதற்கு சுலபமான தீர்வு ஆண்களை இரவு நேரங்களில் வீட்டில் வைத்து பூட்டி வைக்கலாம். இதனால் பெண்கள் துன்புறுத்தப்படுவது நிறுத்தப்படும்” , “பெண்களை வீட்டில் இருக்கச் சொல்லும் நீங்கள், ஏன் ஆண்களை வெளியே போகக் கூடாது என சொல்ல வேண்டியது தான? இதனால் பெண்கள் கண்டிப்பாக பாதுகாப்பாக இருப்பார்கள்” , “பாதிக்கப்பட்ட பெண் ஒரு இந்தியர்தான். அவர் ஏதொ வெளி நாட்டிலிருந்து வந்த பெண் அல்ல” என்று பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்து அவர்களையும், அவர்கள் சார்ந்த சமூகத்தையும் முன்னேற்றப்பாதைக்கு இட்டுச்சென்றுக் கொண்டிருக்கும் இந்த நவீன காலத்திலுமே பெண்கள்தான் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்ற படிப்பினைகள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதுப்போன்ற அறிவுறுத்தல்களை நிறுத்த என்னதா வழி என்றும் பல தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.