இந்தியா

2 லட்சம் சந்தாதாரர்களை இழந்த நெட்ஃபிளிக்ஸ்.. அந்த அறிவிப்புதான் காரணமா?

ஜா. ஜாக்சன் சிங்

பத்து ஆண்டுகளில் இல்லாத அளவாக, 2 லட்சம் சந்தாதாரர்களை இழந்துள்ளதாக நெட்ஃபிளிக்ஸ் அறிவித்துள்ளது.

பிரபல ஓ.டி.டி தளமான நெட்ஃபிளிக்ஸ் உலக அளவில் முன்னணியில் இருந்து வருகிறது. சந்தா கட்டணம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த காலாண்டில் மட்டும் அமெரிக்கா மற்றும் கனடாவில் ஆறு லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக நெட்ஃபிளிக்ஸ் அறிவித்துள்ளது.

நெட்ஃபிளிக்ஸ் கணக்கை பலரும் பகிர்வதால், சந்தாதாரர்களை இழப்பதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு சந்தாதாரர் தங்களது கடவுச் சொல்லை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள விரும்பினால் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முறையை கொண்டு வருவதாக நெட்ஃபிளிக்ஸ் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின் காரணமாகவும் வாடிக்கையாளர்களை இழக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

வருகிற காலாண்டில், மேலும் 20 லட்சம் சந்தாரர்களை இழக்க நேரிடும் என்றும் பங்குதாரர்களுக்கு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலால், ரஷ்யாவில் நெட்ஃபிளிக்ஸ் சேவை நிறுத்தப்பட்டிருப்பதும், சந்தாதாரர்கள் குறைந்ததற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.