சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸின் சகோதரர் வழி பேரனான சந்திர குமார் போஸ் (Chandra Kumar Bose),‘ஆசாத் ஹிந்த் கட்சி’(Azad Hind Party) என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
2016-இல் சந்திர குமார் போஸ் பாஜகவில் இணைந்து, அக்கட்சியில் 7 ஆண்டுகள் பயணித்த நிலையில், 2023-இல் கொள்கை வேறுபாடுகளால் அதிலிருந்து விலகினார். பின்னர் திரிணாமுல் காங்கிரஸிலும் (TMC) சிறிது காலம் அங்கம் வகித்த நிலையில், ’ஆசாத் ஹிந்த்’என்ற புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்தைப் பார்த்து அவருக்கு இந்த எண்ணம் வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய அரசியல் சூழலில் இளைஞர்கள் அதிருப்தியில் இருப்பதை உணர்ந்ததால் இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். நேதாஜி 1943-இல் ஆசாத் ஹிந்த் அரசை அறிவித்த தினமான அக்டோபர் 21 அன்று இக்கட்சி முறைப்படி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “நாடு முழுவதும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் இதில் ஈடுபட்டுள்ளன. கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை என அனைத்திலும் ஊழல் ஒரு வாழ்க்கை முறையாகிவிட்டது. இளைஞர்கள் அரசாங்கங்கள், நிர்வாகம் மற்றும் பிற நிறுவனங்கள் மீது விரக்தியடைந்துள்ளதாகவும், தங்கள் உரிமைகளுக்காகப் போராட அவர்களுக்கு அரசியல் களம் தேவை. சுதந்திரம் அடைந்து கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்குப் பிறகு, இளைஞர்கள் மீண்டும் முன்வருகிறார்கள்.
ஜந்தர் மந்தர் போராட்டங்களில் அந்த உணர்வை நாங்கள் கண்டோம். முற்போக்கான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் மதச்சார்பற்ற அரசியலுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் இளைஞர்களை ஒன்றிணைக்க ஆசாத் ஹிந்த் கட்சி முயலும்” எனத் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கம் தவிர பஞ்சாப், ஒடிசா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களிடையேயும் இந்த அமைப்பிற்கு ஆதரவு திரண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.